
சென்னையில் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போலி காவல் ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ். விடுமுறை தினமான நேற்று பிரகாஷ் தனது காதலியுடன் மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தார். சிறிது நேரம் மெரினாவில் இருந்த ஜோடிகள் பின்னர் வீடு திரும்பினர்.
இவர்களை நோட்டமிட்ட மர்ம நபர் இருசக்கர வாகனம் மூலம் காதல் ஜோடியை பின்தொடர்ந்தார்.
புரசைவாக்கம் அருகே வந்த போது காதல் ஜோடியை மடக்கிப் பிடித்த அந்த நபர் தன் பெயர் கார்த்திக் என்றும் தான் ஒரு காவல் ஆய்வாளர் என்றும் கூறியுள்ளார். காதல் விவகாரம் வீட்டில் தெரியாமல் இருக்க பணம் கொடுக்கும் படி கார்த்திக் மிரட்டியுள்ளார்.
ஆனால் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்றும் நாளை தருவதாகவும் சூர்யபிரகாஷ் கார்த்திக்கிடம் கூறினார்.
இதற்கிடையே கார்த்திக் மீது சந்தேகம் எழ இது குறித்து தலைமைச் செயலக காவல்நிலையத்தில் சூர்யபிரகாஷ் புகார் அளித்தார். போலீசார் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் தன்னிடம் 4 ஆயிரம் பணம் இருப்பதாகவும், அபிராமி திரையரங்கு அருகே வந்தால் பணத்தை தந்துவிடுவதாகவும் சூர்யபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி அங்கு வந்த கார்த்திக்கை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் கார்த்திக் திருவேற்காட்டைச் சேர்ந்தவர் என்பதும் வேலை கிடைக்காததால் தன்னை காவல் ஆய்வாளர் என்று கூறி காதல் ஜோடிகளிடம் பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது.