போலி அனுமதி சீட்டு, போலி நம்பர் பிளேட் வைத்து மணல் கடத்தல் - வசமாக சிக்கிய ஓட்டுநர்...

First Published Feb 5, 2018, 7:28 AM IST
Highlights
Fake Allow slip fake number plate put sand smuggling - driver arrested...


கடலூர்

போலி அனுமதி சீட்டு மற்றும் லாரிக்கு போலி நம்பர் பிளேட் வைத்து மணல் கடத்திய ஓட்டுநரை கடலூரில் காவலாளர்கள் கைது செய்தனர். தப்பியோடிய லாரி உரிமையாளரை காவலாளர்கள்  தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சோதனை சாவடியில் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் காவலாளர்கள் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்துமாறு காவலாளர்கள் உத்தரவிட்டனர். ஆனால், ஓட்டுநர் நிற்காமல் லாரியை வேகமாக ஓட்டிச்சென்றதால் காவலாளர்கள், தங்களது வாகனத்தில் அந்த லாரியை பின்தொடர்ந்து துரத்திச் சென்றனர்.

அரசங்குடி காப்புக்காடு அருகே சென்றபோது அந்த லாரியை காவலாளார்கள் மடக்கி பிடித்தனர். அந்த லாரியில் மணல் இருந்தது. இதையடுத்து அந்த மணலை கொண்டு செல்வதற்கான அனுமதி சீட்டு உள்ளதா? என்று காவலாளர்கள் கேட்டனர். உடனே ஓட்டுநர் அனுமதி சீட்டு ஒன்றை கொடுத்தார்.

"அந்த அனுமதி சீட்டு சென்னை கனிமம் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறையால் வழங்கப்பட்டது" என்று இருந்ததைக் கண்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் போலி அனுமதி சீட்டு தயாரித்து மணல் திருடியது தொடர்பாக ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் செவந்திபட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல்(40) என்பதும், போலியாக அனுமதி சீட்டு தயாரித்தும், லாரியில் போலி நம்பர் பிளேட் வைத்தும் மணல் கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து சக்திவேலை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளரான பாலசிங்கத்தை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர். மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!