
சென்னை சில்க்ஸ் கட்டிட தீயை அணைக்க தண்ணீருக்கான செலவு 30 லட்சம் ரூபாய் எனவும், அந்த பணம் அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டதாகவும் சென்னை சில்க்ஸ் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை சுவர் திடீர் என இடிந்து விழுந்தது.
மேலும் நேற்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.
இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் உட்பகுதி எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறினர்.
இந்த தீயை அணைக்க ஏரளாமான தண்ணீரும் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. தீயை அணைப்பதற்கான செலவை கட்டிடத்தின் நிர்வாகம் தான் தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கபட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிட தீயை அணைக்க தண்ணீருக்கான செலவு 30 லட்சம் ரூபாய் எனவும், அந்த பணம் அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டதாகவும் சென்னை சில்க்ஸ் மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.