ரேசன் கடைகளில் கட்டாயப்படுத்தி விற்கப்படும் காலாவதியான உப்பு பாக்கெட்கள்; அதிர்ச்சியில் மக்கள்...

First Published Jan 4, 2018, 10:39 AM IST
Highlights
Exhausted salt packets forcing and selling ration shops People in shock ...



காஞ்சிபுரம்

ரேஷன் கடையில் காலாவதியான உப்பு பாக்கெட் கட்டாயப்படுத்தி விற்கப்படுவதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது குறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு விலையில்லா அரிசி, மானிய விலையில் சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.

மேலும், பொருட்களை வாங்கும் மக்களிடம் சோப்பு, உப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வலுக்கட்டாயமாக விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் மளிகை பொருட்கள் தரம் குறைவாக உள்ளது என்று மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் வாலாஜாபாத் தாலுகாவுக்கு உட்பட்ட தென்னேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஏபி.093 எண் உள்ள ரேசன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கட்டாயப்படுத்தி உப்பு விற்பனை செய்யப்பட்டது.

அதை வாங்கிச் சென்ற குடும்ப அட்டைதாரர்கள் வீட்டில் சென்று பார்த்தபோது உப்பு பாக்கெட் காலாவதியானது என்பது தெரியவந்தது. அதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த உப்பு பாக்கெட் 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ‘பேக்கிங்’ செய்யப்பட்டுள்ளது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகிடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அந்த உப்பு பாக்கெட் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் காலாவதி ஆகிவிட்டது. ஆனால் அதன் மேல் காலாவதி தேதியை 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் என மாற்றி ஒட்டி விற்பனை செய்ததை கண்டு மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.

ஏழை மக்களுக்கு நியாய விலையில் தரமான பொருட்களை வழங்க வேண்டிய அரசுத் துறையே காலாவதி பொருட்களை விற்பனை செய்வது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, காலாவதியான பொருட்களை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்யவும், இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

click me!