
வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில், சென்னையின் ஒவ்வொரு அங்குலமும் கரு மேகங்களால் சூழப்பட்டுள்ளது என்றும், இது அடுத்த சில மணி நேரங்களில் பயங்கர காற்றும் மழையுமாக மாறக் கூடும் என தெரிவித்தார்.
இந்த வெப்பச்சலனம் காரணமாக முதலில் கடல் காற்று வீசக்கூடும் என்றும் பின்னர் அது கனமழையாக மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில், நுங்கம்பாங்கம் , எழும்பூர், கோயம்பேடு, தாம்பரம், ராயப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்துார், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது..
இதனிடையே தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக சென்னை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, பேரையூர், செங்கம்படை,கப்பலுார் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
தஞ்சாவூர் பள்ளி அக்ரஹாரம்,அய்யம்பேட்டை, கீழவஸ்தா,சாவடி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக பெரிய கோயில் அருகே உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.