
தமிழக அரசின் இ-சேவை மையங்களில் சேவையைப் பெறுவதற்கு இனி செல்போன் எண்ணை கட்டாயம் கொடுக்க கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின் கீழ், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக தற்பொழுது 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப் பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இச்சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை மக்களுக்கு விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும் வரும் 2 ஆம் தேதி முதல் செல்போன் எண் கட்டாயமாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு செல்பவர்கள், தங்களது கைபேசி எண்-ஐ கணினி பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம் குறித்த விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப் படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள 155250 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை 1800 425 1333 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தீர்வு பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி மூலமாக, இணையம் வழியாக மக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட முடியும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.