ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பாரப்பாளையம் குமாரவலசு பிரிவில் சரக்கு லாரி மற்றும் ஆம்னிவேன் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை அடுத்த தானூத்துபாளையத்தை சேர்ந்தவர் தெய்வானை, இவரது மகள் மஞ்சு, தெய்வானையின் தங்கை அருக்காணி, மற்றுமொரு தங்கையான குப்பாயி மகள் தேன்மொழி, அவரது தம்பி குமரசேன்,மோகன்குமார் மற்றும் முத்து ஆகியோர் சாமி கும்பிட பழனிக்கு சென்றனர். இவர்கள் ஏழுபேரும் மொடக்குறிச்சியை சேர்ந்த ஒரு ஆம்னிவேனில் இன்று அதிகாலையில் பழனிக்கு சாமிகும்பிட சென்று விட்டு,இன்று பகல்12. 10 மணி அளவில் ஊர்திரும்பிக்கொண்டிருந்தனர். இவர்கள் வந்து கொண்டிருந்த அந்த வேனை படையப்பன் என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
undefined
இவர்கள் வந்த வேன் சிவகிரியை அடுத்த பாரப்பாளையம், குமாரவலசு பிரிவு அருகே வந்தபோது எதிரில் வந்த சரக்குலாரி ஒன்று மீது ஆம்னிவேன் மோதியது. மோதியதில் ஆம்னிவேன் உருக்குலைந்து, அதில் பயணம் செய்த தெய்வானை, மஞ்சு, அருக்காணி, தேன்மொழி, மற்றும் ஆம்னிவேனின் டிரைவர் படையப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் அந்த வேனில் பயணம் செய்த மோகன்குமார், குமரேசன் ஆகியோருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. முத்து சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த சிவகிரி காவல் ஆய்வாளர் முருகன் அந்த இடத்திற்கு சென்று பிரேதங்களை மீட்டு ஆம்புலன்ஸ்கள் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். மேலும் சம்பவத்துக்கு காரணமான லாரியின் ஓட்டுநரை கைதுசெய்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பழனிக்கு சென்றுவிட்டு திரும்பும்போது ஏற்பட்ட இந்த விபத்தில் ஐந்துபேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சிவகிரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி இந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுவதாகவும், போக்குவரத்தை காவல் துறையினர் முறையாக கட்டுப்படுத்துவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.