காவல் நிலையத்திற்குள் அடாவடியாய் புகுந்து ஏட்டுக்கு சரமாரி அடி; கொலை மிரட்டலும் விடுத்த மூன்று பேர் கைது...

First Published Aug 6, 2018, 12:24 PM IST
Highlights

விழுப்புரத்தில் மினி லாரியை பறிமுதல் செய்ததால் காவல் நிலையத்திற்குள் புகுந்த வியாபாரி, போலீஸ் ஏட்டுவை அடித்து வெளுத்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாலமுரளி தலைமையில் காவலாளர்கள் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கச்சிராப்பாளையம் அருகே போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தனது மினி லாரியை  நிறுத்திவைத்து வெங்காயம் விற்றுக் கொண்டிருந்தார். 

அவரிடம் சென்று, வெங்காயம் விற்றவரைக் குறித்து விசாரித்தனர். அதற்கு அவர், தான் கள்ளக்குறிச்சி வ.உ.சி.நகரைச் சேர்ந்த முனாப் மகன் அஸ்லாம் என்று கூறியுள்ளார். பின்னர், அவரிடம் காவலாளர்கள் வாகனத்திற்குரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால், அவரிடம் ஆவணங்கள் இல்லை என்றும் அதனால் அவரது மினி லாரியை பறிமுதல் செய்தோம் என்றும் காவலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

மினி லாரியை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குக் கொண்டுச் சென்றுவிட்டனர். பின்னர், காவல் நிலையத்திற்குச் சென்ற அஸ்லாம், தனது மினி லாரியை ஏன் பறிமுதல் செய்தீர்கள்? என்று அப்போது பணியில் இருந்த ஏட்டு முருகனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு முறையாக பதில் சொல்லாமல் இருந்ததால் ஆத்திரமடைந்தார் அஸ்லாம். பின்னர், முருகனை அடி வெளுத்துள்ளார். தனது வண்டியை தராவிட்டால் கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினாராம். 

இதனால் ஏட்டு முருகன் கொடுத்த புகாரின்பேரில் காவலாளார்கள் அஸ்லாமை கைது செய்தனர். இதனையறிந்து காவல் நிலையம் வந்த அஸ்லாமின் தம்பி சதாம் உசேன், உறவினர் சையத் முஸ்தபா ஆகியோரும் அஸ்லாமை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டனராம். இதனையடுத்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்த குற்றத்திற்காக சதாம் உசேன், சையத் முஸ்தபா ஆகிய இருவரையும் கைது செய்தனர். 

காவல் நிலையத்திற்குள்ளேயே புகுந்து ஏட்டுவை அடி வெளுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!