
சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றியதாக சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் செய்யப்பட்டு சிறையில் இருந்த ரெட்டி கடந்த 17 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து விசாரணைக்காக அமலாக்கத்துறை அவரை அழைத்து சென்றுள்ளது.
சென்னை தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை நடத்தினர்.
இதில், ஏராளமான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
அதேபோல், அவரது கூட்டாளிகளான சீனிவாசலு, பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோர் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டன.
இதை தொடர்ந்து சேகர் ரெட்டி உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக சேகர் ரெட்டி மீதும், அவரது கூட்டாளிகள் மீதும் சி.பி.ஐ போலீசார் மற்றும் அமலாக்கபிரிவு துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஜாமீன் கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த நீதிமன்றம், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோருக்கு மட்டும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோர் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். அதில், கைது செய்யப்பட்டு 88 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் தங்களுக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என தெரிவிக்கபட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கினார்.
இந்நிலையில், கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், இன்று சேகர் ரெட்டியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.