
நீலகிரி
நீலகிரியில் உள்ள சாலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து யானைக் கூட்டம் நின்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 50 கி.மீ தொலைவில் மொத்தம் 48 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்தச் சாலை அடர்ந்த வனப் பகுதியையொட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மஞ்சூரில் இருந்து கெத்தை, பெரும்பள்ளம் செல்லும் பகுதிகளில் நீராதாரப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, குரங்கு உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன.
அடிக்கடி கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் மஞ்சூர் - கோவை சாலையின் இடையே கெத்தை வழியாக வரும் வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக நடைப்பெற்று வரும் ஒன்று.
இந்த நிலையில், கெத்தையிலிருந்து உதகை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துக் கொண்டிருந்த ஐந்து யானைகள் கொண்ட கூட்டம் பேருந்தை வழிமறித்தது.
இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் குறுகியதாக இருப்பதால் யானைகள் ஒதுங்கவும் இடமில்லாமல் போனது. இதனையடுத்து, யானைகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேருந்தின் முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தன. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
பின்னர், யானைகள் காட்டுக்குள் சென்றபிறகே பயணிகள் நிம்மதி அடைந்து, அரசு பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.