ஆபரேஷன் சக்சஸ்; பேஷண்ட் க்ளோஸ்... கதையாக யானை இறந்ததற்கு வனத்துறையை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்!

Asianet News Tamil  
Published : Nov 18, 2017, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
ஆபரேஷன் சக்சஸ்; பேஷண்ட் க்ளோஸ்... கதையாக யானை இறந்ததற்கு வனத்துறையை வறுத்தெடுக்கும் வலைத்தளவாசிகள்!

சுருக்கம்

elephant died after a minor operation by forest department

ஆளுநர் விசிட் என்று கலங்கடித்துக் கொண்டிருந்த கோவையில்,  கடந்த இரு தினங்களாக உலாவந்த செய்தி, யானை ஒன்று ஆபரேஷன் செய்யப்பட்டு உயிரிழந்த செய்திதான். 

‘ஆசியாவிலேயே முதல் முறையாக காட்டு யானைக்கு அறுவை சிகிச்சை செய்தோம்’ என்று கூறிக் கொண்டிருந்தது கோவை மாவட்ட வனத்துறை. ஆனால் ஆபரேஷன் செய்யப்பட்ட யானை இறந்து போனது. இதை அடுத்து இப்போது திரு திருவென விழித்தபடி  நிற்கிறார்கள் கோவை மாவட்ட வனத்துறையினர்.

கோயமுத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டிக்கு அருகே கொண்டனூர் வன கிராமத்தின் அருகில்  நன்கு வளந்த ஆண் யானை ஒன்று கடந்த சில நாட்களாக பகல் நேரத்திலும் கூட சுற்றிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த யானையால் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. அந்த யானையைக் கவனித்தவர்கள்,  அதன் காலில் பெரிய புண் இருப்பதை அறிந்தனர். அதனால்தான் அது நடக்க முடியாமல் நடந்து வந்தது என்று கருதினர்.

வனத்தில் இருக்கும் போதே யானை இப்படி புண்ணால் அவதிப்பட்டு நடக்க முடியாமல் இருந்ததை வனத்துறை ஊழியர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள் என்று கருதினர். எனினும், யானை தள்ளாடித் தள்ளாடி வந்ததை வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. 

இந்நிலையில், புண்ணால் ரணமாகி காட்டு யானை ஊரின் ஓரமாகவே சுற்றிக் கொண்டிருந்ததை வனத்துறையினரிடம் சொல்லி புகார் கொடுத்தனர் வன உயிரின ஆர்வலர்கள். இதை அடுத்து,  வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயற்சியின் இறங்கினர். 

வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள் மயக்க மருந்து ஊசியை துப்பாக்கியால் சுட்டு செலுத்தி யானைக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். யானையும் இவர்களின் சிகிச்சைக்கு ஒத்துழைத்தபடி, அமைதியாக இருந்தது. வனத்துறையினர் தந்த ஆரோக்கியமான உணவையும் வாங்கி  சாப்பிட்டது. 

இதை அடுத்து, ‘காட்டு யானைக்கு வெற்றிகரமாக ஆபரேஷனை  செய்து முடித்தோம்’ என்று வனத்துறையும், வன கால்நடை மருத்துவர்களும் அந்தப் பேஷண்ட் யானை முன் நின்று செல்ஃபி, போட்டோ எல்லாம் எடுத்தனர். பின்னர் அந்த யானையை காட்டுக்குள் அனுப்பி விட்டனர். 

ஆனால் ஆபரேஷன் ஆன அந்தக் காட்டு யானை நேற்று இறந்துவிட்டது. ‘ஆபரேஷன் சக்ஸஸ் பேஷண்ட் க்ளோஸ்’ கதையாக, இப்படி ஆபரேஷன் செய்தும் யானை உயிரிழந்ததே என வருத்தம் கொண்டார்கள் வனத்துறையின் கால்நடை மருத்துவர்கள். 

இந்தச் செய்தி நேற்று வெளியானதும், வலைத்தளவாசிகள் கொதித்தெழுந்தனர். இப்போது வனத்துறையை வறுத்தெடுத்து வருகின்றனர். ‘யானை ஏன் இறந்தது, சூப்பர் சிகிச்சை என்று சீன் போட்டீர்களே, அதையும் தாண்டி அது ஏன் இறந்தது? 

உடலில் புண்ணோடு யானை வனத்திற்குள் சுற்றும் போதே ரோந்து சென்ற வனத்துறையினர் அதை கவனிக்கவில்லையா? கவனித்தும் சிகிச்சை தராமல் விட்டுவிட்டீர்களா? 

வன கால்நடை மருத்துவர்களில் திறமையான நபர்கள் தமிழகத்தில் இல்லையா? சிகிச்சை செய்தும் தொடர்ந்து யானைகள் இறப்பது ஏன்?’ 

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு  தமிழக வன துறையை வறுத்தெடுத்து வருகிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

கூட்டமும் இல்ல.. செலவும் இல்ல.. யாரும் சொல்லாத 5 மினி ஊட்டி! குறைந்த செலவில் குடும்பத்துடன் ஜாலியா போக சூப்பர் சம்மர் பிளான்!
மே 4-ல் வானிலை டோட்டலா மாறுது.. சூரியனுக்கு 'டாட்டா'.. வெளுக்கப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்?