வடகிழக்கு பருவமழை: மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

By Manikanda Prabu  |  First Published Nov 15, 2023, 5:06 PM IST

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று தொடங்கியதிலிருந்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக் கூடுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்லது.

அதன்படி, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.

Tap to resize

Latest Videos

இந்த ஆய்வுக் கூட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களின் தலைமைப் பொறியாளர்களுடனும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடனும், பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை அமைச்சர் தங்கம் தென்னரசு மேற்கொண்டார்.

மேலும், கனமழை பெய்து வரும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து, சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார். சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.

வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சார வாரியம் சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடந்த 4ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் அனைத்தினையும் முழுமையாக பின்பற்ற வேண்டும் என அனைத்து தலைமைப் பொறியாளர்களுக்கும் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த 169 மின் கம்பங்கள் மற்றும் 72 மின் மாற்றிகள் உள்ளிட்ட அனைத்து சேதங்களும் துரித முறையில் சரி செய்யப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசை கல்லை சுத்தம் செய்ய துடைப்பம்; லிட்டர் கணக்கில் நெய்: நெட்டிசன்கள் கேள்வி!

மிக கனமழை காரணமாக ஏற்படும் மின் சேதாரங்களை போர்கால அடிப்படையில் துரிதமாக சரி செய்வதற்காகவும், சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 44 மின்பகிர்மான வட்டங்களுக்கும், வட்டத்திற்கு 10 இலட்சம் வீதம் மொத்தமாக 4.4 கோடி நிதியினை உடனடியாக வழங்கிடவும் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.

பின்னர், மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் (SLDC) மற்றும் சென்னை மின் பகிர்மான கட்டுப்பாட்டு மையம் (SCADA) ஆகியவற்றில் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும் சீரான மின் விநியோகம் தொடர்பாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைபேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

click me!