
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் நாளை (அக்டோபர் 27) வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளனர். இந்தச் சந்திப்பு நாளை மாலை 4.15 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, நாடு முழுவதும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் தரப்பு வழக்கறிஞர், "தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கும்" என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும், "மனுதாரரின் குறை, அதன் மூலம் தீர்க்கப்படும்" என்றும் அவர் கூறினார். இதனைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில், தலைமை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் தேர்தல் நடக்க உள்ள பீகாரில் இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டிலும் இந்தப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளன.