கதறும் விவசாயிகள்..! நெல் கொள்முதல் நிலையத்தில் நடப்பது என்ன.? நேரடியா களத்தில் இறங்கிய எடப்பாடி

Published : Oct 22, 2025, 01:05 PM IST
eps and paddy

சுருக்கம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் தாமதமாவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்த  எடப்பாடி பழனிச்சாமி, அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, விவசாயிகளின் துயர் துடைக்க வலியுறுத்தினார்.

Tamil Nadu paddy procurement issues : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழையானது வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் வடகிழக்கு பருவமழை பல மாவட்டங்களில் கொட்டிவருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இது தவிர மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் கொட்டி வைத்து தொடர்ந்து காத்து கிடக்கின்றனர். கொள்முதல் பணி தாமதம் காரணமாக, தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெல் குவியல்கள் மனையில் நனைந்து வருகின்றன. இதனால், நெல்மணிகள் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.

நெல் கொள்முதல் - விவசாயிகள் பாதிப்பு

இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தஞ்சாவூருக்கு அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார். அப்போது  விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்துள்ளோம் . இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் லாரிகள் பிரச்சனையால் நெல்கள் உடனுக்குடன் இயக்கமும் செய்யப்படுவதில்லை . இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான மற்றும் இளம் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன என புகார் தெரிவித்தனர்.

பொய் சொல்லும் அதிகாரிகள்-சீறும் எடப்பாடி

இதைகேட்டு எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளின் துயர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க அரசுக்கு வலியுறுத்துவேன். உடனுக்குடன் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் என்று அரசிடம் எடுத்துக் கூறுவேன். விவசாயிகளின் கண்ணீர் துடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று விவசாயிகளிடம் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. தஞ்சை காட்டூர் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவந்து 15 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. லாரிகள் பிரச்சனை, கொள்முதல் தாமதத்தால் நெல்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எழும்பூர் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தெற்கு ரயில்வே!
அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்