8 மாத திமுக ஆட்சியில்..! தொடரும் காவல்துறை சித்ரவதை.. டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி..

Published : Jan 17, 2022, 03:05 PM ISTUpdated : Jan 17, 2022, 03:07 PM IST
8 மாத திமுக ஆட்சியில்..! தொடரும் காவல்துறை சித்ரவதை.. டாராக கிழித்த எடப்பாடி பழனிசாமி..

சுருக்கம்

மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த அரசை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு வாய்ச் சொல்லில் வீரரடி என்பது போல், நேரடியாக புகார்களை வாங்குதல், பெண் காவலர்களுக்கு குறைவான பணிச் சுமை, வார விடுமுறை போன்ற பலவற்றை செய்வதாகக் கூறினாலும், நடைமுறையில் இவை எதுவுமே கடைபிடிக்கப்படுவதில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

மதுரையில் உறவினர்களுடன் வந்த இளம் பெண்ணை மிரட்டி காவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தது; கல்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், உடன் பணிபுரியும் காவலர்கள் மீதே புகார் கூறி தற்கொலைக்கு முயன்றது; விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் போலீசார் தாக்கியதால் வியாபாரி உலகநாதன் இறந்துவிட்டதாக காவலர்கள் மீது புகார்; ராமநாதபுரம், முதுகுளத்தூர் அருகே நீர்கோழி ஏந்தல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவன் மணிகண்டன் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு வீட்டில் மர்மமான முறையில் இறந்ததாகப் புகார்.

திருத்தணியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருந்த புளியில் பல்லி இறந்து கிடந்ததை ஊடகங்களுக்குத் தெரிவித்த நந்தன் என்பவர் மீது ஜாமீனில் வெளிவர இயலாதபடி, வழக்கினை திருத்தணி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். இதை அறிந்த அவரது மகன் பாபு என்கிற குப்புசாமி தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார். 

தற்போது கடந்த 8 ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனை, வழக்கு சம்பந்தமாக நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல் நிலையக் காவலர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகவும், பிறகு 11-ஆம் தேதி அவரை கைது செய்து நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்ததாகவும், 12-ஆம் தேதி காலை மாற்றுத் திறனாளி பிரபாகரன் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அன்றே அவர் உயிரிழந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையில் இறந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததுடன், மாற்றுத்திறனாளியின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் சரக DIG, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூவரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

12-ஆம் தேதி நடைபெற்ற, இந்த மாற்றுத் திறனாளியின் மரணம் பற்றிய செய்தி, 16-ஆம் தேதிவரை மக்களைச் சென்றடையாமல் இந்த அரசும், காவல்துறையும், ஊடகங்களும் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது, பத்திரிக்கை சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள், தமிழ்நாட்டில் இருந்து மறைந்துவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதே போல் சென்னையில் முகக் கவசம் அணியாத சட்டக் கல்லூரி மாணவர் மீது அபராதம் விதித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய காவலர்கள், அந்த மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளின் எல்லை மீறல்தான் காவல் நிலைய இறப்புகளாக மாறிவிடும் சூழ்நிலையை உருவாக்குகின்றன.

சேலம் மாவட்டம், கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரனின் இறப்புக்கு, தொடர்புடைய காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும், இந்த அரசின் தவறினால் தனது இன்னுயிரை இழந்த திருத்தணி குப்புசாமியின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், நான் ஏற்கனவே கூறியபடி, காவல் துறையில் நேர்மையான அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான பணியிடங்களை வழங்குங்கள்.சட்டத்தின் ஆட்சியினை நிலைநிறுத்துங்கள், தவறு செய்யும் காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று அரசை வலியுறுத்துகிறேன். மேலும், உண்மைச் சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடும் இந்த அரசை கண்டிக்கிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil News Live today 09 December 2025: பலத்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தும் விஜய்
விஜய் எண்ட்ரி.. மாநிலத்தின் மொத்த போலீஸ் படையையும் களம் இறக்கிய ரங்கசாமி..