
திருவொற்றியூர் மாட்டு மந்தை ரயில் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தை, முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
திருவொற்றியூரில் இருந்து மணலியை இணைக்கும் வகையில் திருவொற்றியும் ரயில் நிலையம் அருகே மாட்டுமந்தை என்ற பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது.
58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 530 மீட்டர் நீளமும் 13.5 மீட்டர் அகலமும் கொண்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார்.
அப்போது ரயில்வே மேம்பாலத்தில் நின்றிருந்த மக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், 2011ம் ஆண்டுக்குப் பிறகு அதிமுக ஆட்சி காலத்தில் 61 ரயில்வே மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டதாக கூறினார்.
மேம்பாலம் கட்டுமானப் பணியை துரிதப்படுத்தியதால் 6 ஆண்டுகளில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த மாட்டுமந்தை மேம்பாலம் ஏற்கனவே ஆமை வேகத்தில் கட்டப்பட்டாலும், தற்போது பணிகள் முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது,
பொது மக்களின் பயன்பாட்டுக்கு பாலத்தை திறக்காவிட்டால் நாங்களே திறந்து கொள்வோம் என பொது மக்கள் எச்சரிக்கை விடுத்த பின்னரே இன்று இந்த பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.