
முதலமைச்சர் எங்களை சந்தித்து உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூறியுள்ளனர். இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நதிநீர்களை இணைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
40 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் தேசிய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அரை நிர்வாண போராட்டம், எலி தின்னும் போராட்டம், சாட்டியடி போராட்டம், அரை மொட்டை அடிக்கும் போராட்டம் என தினமும் ஒவ்வொரு விதமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்து சென்றனர்.
இதனிடையே தமிழக விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தேர்வுக்கும் வகையில் வரும் 25 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள முக ஸ்டாலின் அய்யாகண்ணுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு டெல்லி வரும் முதலமைச்சர் எங்களை சந்தித்து உறுதி அளித்தால் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்திருந்தார்.
மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நாளை அனைத்து கட்சி முதல்வர்களும் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.