
உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்ற சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பள்ளி கல்வி இயக்ககத்திற்கு எம்.ஜி.ஆர். பெயரில் தனிக் கட்டடம் கட்டப்படும் என்றும் அப்போது கூறினார். பள்ளிகளில் ரூ.39 கோடி செலவில் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும் என்றார். 3,090 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும் என்றார். தலா 10 கணினிகள் வீதம் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அப்போது அறிவித்தார்.
43 அரசு கல்லூரிகளில் எம்.ஜி.ஆர். பெயரில் கட்டடங்கள் கட்ட ரூ.105 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். புதிதாக 7 அரசு கலைக்கல்லூரிகள், 3 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார். 660 உதவி பேராசிரியர் பணியிடங்கள் புதிதாக நிரப்பப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
நெல்லையில் உலகத் தரத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும் என்றார். ரேஷன் கடைகளுக்கு ரூ.40 கோடியில் கைரேகை பதிவு எந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிக கடன் 10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். சென்னை அருகே மாதவரத்தில் ரூ.25 கோடி செலவில் புதிய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
பணியின்போது உயிரிழக்கும் வன ஊழியர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.