
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என குழப்பம் நீடித்து வந்தது. இது தொடர்பான பிரச்சினையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அவரது தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜரானார்.
இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!
வழக்கு விசாரணையின் போது, “நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் கேட்டுள்ளனர்.” என கபில் சிபல் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், “செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகளுக்கு முன்பானது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக எந்த சாட்சியும் கூறவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்ட ஆண்டில் இருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” எனவும் கபில் சிபல் வாதாடினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனு கோரிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது வருகிற 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிபதி உத்தரவிட்டார்.