
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்தார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் தொடர்ச்சியாக திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்வர் விஜய் தனி விமானத்தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, அமைச்சர்கள் இணைந்து வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, “தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்னர் தான் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும்.
துரதிஷ்டவசமாக கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தமிழக வெற்றி கழகத்தை ஆதரிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் தொடரலாமா? இல்லையா? பொதுக்குழு கூட்டி முடிவு செய்யப்படும். தனிப்பட்ட முறையில் நான் கருத்து சொல்ல முடியாது. ஜூன் 27ம்தேதி மதிமுக பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் தவெக ஆதரவு நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
ஒரு கட்சியின் உறுப்பினர் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சக்கு செல்வது அவர்களின் தனிப்பட்ட உரிமை. அது கட்சித் தாவல் சட்டத்தில் வராது. விமான நிலையம் தொடர்பாக முதல்வர் விஜய்யை சந்தித்து பேசினேன். ஓடுதள விரிவாக்கத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கு நிலமும் கைப்படுத்தப்பட்டு விட்டது. இந்திய விமான நிலையங்களில், வேகமாக வளரக்கூடிய விமான நிலையமாக திருச்சி விமான நிலையம்” உள்ளதாக தெரிவித்துள்ளார்.