
ஆன்லைன் மூலம் எலக்ட்ரானிக் பொருள்கள், நுகர்வோர் பொருள்களை விற்பனை செய்து வரும் இணையதளங்களில் பிளிப்கார்ட் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது...
விழாக்காலங்களில் ஆடித் தள்ளுபடி ரேஞ்சில் உள்ளூர் துணிக்கடைக்காரர்களும் எலக்ட்ரானிக் பொருள் விற்பனையாளர்களும் டீல் போட்டுக் கொண்டிருக்கும் போது, பிளிப்கார்ட் வேறு வகையில் மெகா தள்ளுபடியில் இறங்கிவிடும்.
10% - 40%, 50% என்று பாதிக்குப்பாதி விலைக்குக் கூட சில பொருள்களை தள்ளுபடி விலையில் அளித்து, டீலர்களின் தொடர்பைக் கொடுக்கும்...
இதனை நேரடியாக flipkart.com தளத்தில் மட்டுமே போய்ப் பார்த்து நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஏமாற்றுக்காரர்கள் போலியாக பிளிப்கார்ட் லோகோவுடன், அதன் ஆஃபர் விவரங்களை, அதே இமேஜ்கள், விளம்பரப் படங்களை வைத்து, ரூ.1, ரூ.99, ரூ. 999 என்ற ரேஞ்சில் மிகவும் விலை குறைவாக டீல் என்ற பெயரில் விளம்பரப் படுத்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி விடுகின்றன....
அதற்காக அவர்கள் flipkart என்ற பெயருடன் கூடிய டொமெய்ன், ப்ளாக் எனப்பதிந்து, அவற்றின் வழியே பேமெண்ட் கேட்வே..யும் ஓபன் செய்து விடுவார்கள். இவற்றில் உள்ள கவர்ச்சிகர விளம்பரங்களைப் பார்த்து ஏமாந்து, பேமெண்ட் கேட் வேக்கு செல்பவர்கள் பலர் நொந்துதான் போயிருக்கிறார்கள். அவர்களின் பணம் எங்கே போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது.
இந்த விளம்பரங்களில், பயனாளிகளை தூண்டில் போட்டு இழுக்கும் போது, இதே தகவலை நீங்கள் குறைந்தது பத்து பேருக்கு பகிர்ந்தால் மட்டுமே இந்த டீலில் நீங்கள் கலந்து கொள்ள முடியும் என்ற தகவலையும் அதில் பதிவிட்டிருப்பார்கள். இதை நம்பி ஏமாந்து, பத்து வாட்ஸப் குழுக்களுக்கு விளம்பரத்தை பகிரும் நபர்கள், தங்கள் நட்பு வட்டத்தில் கெட்ட பெயரை எடுப்பார்கள் என்பதுடன், மேலும் பலரை ஏமாற்றுக்காரர்களின் வலையில் விழச் செய்து விடுகிறார்கள் என்பதுதான் உண்மை.
இந்தப் பின்னணிகளை, ஏமாற்றுக் காரர்களின் ஜால வித்தைகளை பிளிப்கார்ட் நிறுவனமே தங்கள் இணையப் பக்கத்தில் வெளியிட்டு, வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்கிறது.
குறிப்பாக, flipkart.dhamaka-offers.com, flipkart-bigbillion-sale.com என்றெல்லாம் வரும் இணையதள மோசடிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல... அவற்றை நம்பாதீர்கள் என்றே அது போடுகிறது. அதுபோல், இந்த இணையதளங்களில் பதிவு செய்துவிட்டு, கிரெடிட் கார்ட் எண், வீட்டு முகவரி போன்றவற்றை எஸ்.எம்.எஸ், போன் கால்ஸ் மூலம் கேட்டால் எச்சரிக்கையுடன் இருங்கள் என்றும் அது கூறுகிறது.
இப்போது, தீபாவளியை ஒட்டி இது போன்ற மோசடி விளம்பர பார்வர்ட்கள் வாட்ஸ் அப்பில் உலாவருகின்றன. அவற்றின் பின்விளைவுகளை அறியாமல் பலரும் உள் நுழைந்து, பணத்தை இழக்கிறார்கள் என்பதுதான் வேதனை!