ரூ.500, ரூ.1000-க்கு போலி கல்வி சான்றிதழ்கள்; தயாரித்து விற்றுவந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது...

First Published Feb 17, 2018, 11:10 AM IST
Highlights
Duplicate education certificates for Rs.500 and 1000 retired teacher arrested


கடலூர்

கடலூரில் ஒருவர் ரூ.500, ரூ.1000-க்கு போலி 8-ஆம் வகுப்பு சான்றிதழ்களை தயாரித்து விற்றுவந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மடத்தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(75). இவர் விருத்தாசலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, கடந்த 1995-ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார்.

இவர் போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்வதாக, திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவலாளர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், அவர் போலியாக கல்வி சான்றிதழை தயாரித்து விற்பனை செய்தது உறுதியானது. இதனையடுத்து காவலாளர்கள், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவரது உத்தரவின்படி உதவி காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், விருத்தாசலம் ஆய்வாளர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் காவலாளர்கள் ஆயியார்மடத்தெருவில் உள்ள ராமகிருஷ்ணனின் வீட்டிற்குள் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள அரசு பள்ளிகளின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ்கள், உண்மை தன்மை சான்றிதழ்கள், போலி முத்திரைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடன்னே அவற்றை பறிமுதல் செய்த காவலாளர்கள் ராமகிருஷ்ணனையும் கைது செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், "ராமகிருஷ்ணன், தான் பணிபுரிந்த பள்ளி தாளாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விருப்ப ஓய்வுபெற்றார். அதன் பிறகு அவர், போலியாக கல்வி சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இடைநிலை கல்வி சான்றிதழ் மற்றும் 8-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ்களை போலியாக வெவ்வேறு பள்ளிகளின் பெயர்களில் தயாரித்து அந்தந்த பள்ளிகளின் போலி முத்திரைகளை கொண்டு சீல் வைத்து போலியாக சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். இதற்காக ஒரு சான்றிதழுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1,000 வரை வாங்கியுள்ளார்.

ஓட்டுநர் அடையாள அட்டை எடுப்பதற்கும், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. எனவே பலர், ராமகிருஷ்ணனை நாடி, எந்த பள்ளிக்கூடத்தின் பெயரில் சான்றிதழ் வேண்டும் என்று மட்டும் சொன்னால் போதும், அதற்கு ஏற்றாற்போல் போலி சான்றிதழை தயாரித்து அவர் வழங்கி உள்ளார்.

அவரிடம் போலி சான்றிதழ் பெற்றுள்ளவர்கள் யார்? யார்? என்ற விவரத்தை காவலாளர்களிடம் தெரிவித்துள்ளாராம். இந்த விசாரணை முடிந்ததும் ராமகிருஷ்ணன், விருத்தாசலத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!