
சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால் முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய ரயில்கள் தாமதமாக வருகின்றன. தண்டவாளங்களில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளதால், ரயில்களை மெதுவாக இயக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கிறது. தமிழகத்தின் உள் மாவட்டங்கள் சிலவற்றிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வரும் கன மழையால் சென்னை உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், கனமழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என எச்சரித்துள்ளார்.
இதனிடையே கனமழை காரணமாக சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வரக்கூடிய ரயில்கள் தாமதமாக வந்தன. தண்டவாளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நேற்று இரவு பெய்த கனமழையால் ரயில்வே தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் சிக்னல் கேபிள்கள் பழுதடைந்து விட்டன. இதன் காரணத்தால், ரயில் சிக்னல் சரியாக வேலை செய்யவில்லை. இதனால், தாம்பரம் முதல் பீச் வரை செல்லும் ரயில்களும் கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்களும் 30 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. வழக்கமாக 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்கப்படும்.
அதே போல் தாம்பரம் முதல் செங்கல்பட்டு மற்றும் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் வழக்கமாக அரை மணிக்கு ஒன்று இயக்கப்படுவது, இந்த மழையால் ஒன்றரை மணி நேரத்திற்கு ஒரு முறை இயக்கப்படுகிறது. இதனால், வழக்கமாக அலுவலகம் செல்வோர், ரயிலில் பயணிப்போர் பெரிதும் அவதிப் பட்டு வருகின்றனர். சாலைப் போக்குவரத்து பிரச்னையாகியுள்ள நிலையில், ரயில் மூலமாவது செல்லலாம் என வந்தவர்கள் இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்தனர். இயக்கப்படும் குறைந்த ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.