
பணிச்சுமையின் காரணமாக கடும் மன உளைச்சலில் இருக்கிறேன். மன உளைச்சல் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அடிக்கடி வருகிறது. என்னை எப்படியாவது வேறு பிரிவு மாற்றி, என் வாழ்க்கை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று பெண் டி.எஸ்.பி தமிழக டிஜிபி சைலேந்திர பாபுக்கு எழுதியுள்ள கடிதம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு டி.எஸ்.பி- ஆக இருக்கும் சந்தியா, தமிழக டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று, 2019-ல் டிஎஸ்பி பணியில் சேர்ந்தார். பயிற்சி முடித்து மங்களமேடு சரகத்திற்குக் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்.8-ம்தேதி, பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு உட்கோட்ட சட்டம் ஒழுங்குப் பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது கடந்த ஒரு மாதமாக சென்னையில் பயிற்சியில் இருக்கிறார்.
இந்த பயிற்சியானது இந்த மாதம் இறுதியில் முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், டி.எஸ்.பி சந்தியா டிஜிபி-க்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார். இந்த கடிதம் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. தற்போது அந்த கடிதம் பெரும் சர்ச்சையாகி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அந்த கடிதத்தில், ``சட்டம் ஒழுங்கு பணிகள் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு உடல்நல பிரச்னைகள் உள்ளன. பணிச் சுமையால் பெரிதும் மன உளைச்சல் ஏற்படுகிறது.
தற்போது தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. என் கணவர், பெற்றோர், மாமியார், மாமியார் ஆகியோருடன் நல்ல குடும்ப வாழ்க்கை இருக்கிறது. இருப்பினும் பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் இருக்கிறேன். தயவு செய்து என் உயிரை காப்பாற்ற பணிச் சுமை குறைந்த சேவை பயிற்சி மையம் அல்லது போலீஸ் பயிற்சி மையம்அல்லது பட்டாலியன் போன்ற இடங்களுக்கு என்னை மாற்றி என் வாழ்க்கை காப்பாற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் ” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதம் போலீஸார் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.இதுகுறித்து பெரம்பலூர் எஸ்.பி மணி கூறுகையில், ``டி.எஸ்.பி வேலை பளு அதிகமாக இருப்பதாக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு அப்படி என்ன மன அழுத்தம் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். காவல்நிலையத்தில் மற்ற அதிகாரிகளிடம் என்னை பற்றி கேட்டுப்பாருங்கள். என்னிடம் வேலை பார்க்க முடியாதவர்கள் யாரிடம் வேலை செய்ய முடியாது. நான் அவ்வளவு மென்மையாக அதிகாரிகளை கையாளுவேன். இவர், நேரடியாக டிஎஸ்பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கு வந்திருக்கிறார். எனவே, எதற்காக இப்படி இவர் கடிதம் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை” என்று கூறினார்.