
விழுப்புரம்
உளுந்தூர்பேட்டையில் குடிவெறியால் பெண்கள், மாணவிகளிடம் குடிகாரர்கள் அத்துமீறுவதால் பொங்கி எழுந்த மக்கள், அதற்கு காரணமான டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மாரனோடை கிராமத்தில் 200–க்கும் மேற்பட்ட குடும்பங்கள வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக டாஸ்மாக் சாராயக் கடை இயங்கி வருகிறது.
இங்கு வரும் குடிகாரர்கள் குடித்துவிட்டு குடிவெறியில் அவ்வழியாகச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளிடம் அத்துமீறி இழி செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால் அந்த டாஸ்மாக் சாராயக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று திருநாவலூர் ஒன்றிய பா.ம.க.வினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது.
அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் கிராம மக்கள் நேற்று காலை கெடிலத்தில் இருந்து டாஸ்மாக் சாராயக் கடை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர், அவர்கள் மதியம் 12 மணி அளவில் கடையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதுபற்றி அறிந்த உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சாகுல் அமீது, உதவி ஆய்வாளர் செல்வநாயகம் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். அதற்கு மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் மக்களுக்கும், காவலாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது.
இதனிடையில் இதுபற்றி அறிந்து வந்த வருவாய்த் துறை அதிகாரி ஞானம் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கிராம மக்கள், “தங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடைக்கு வருபவர்கள் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபடுகின்றனர். மேலும், பெண்களிடம் தகாத முறையில் பேசுகின்றனர். இதனால், இந்த டாஸ்மாக் சாராயக் கடையை உடனே அகற்ற வேண்டும்” என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள், இந்த டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை கடை திறக்கப்படாது என்றும் உறுதியளித்தனர்.
இதையேற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.