
நீலகிரி
இடுவட்டி கிராமத்தில் இருக்கும் சாராயக் கடைக்கு வரும் குடிகாரர்களால் இடையூறு மற்றும் அசௌகரியத்தை குடியிருப்புவாசிகள் அனுபவிப்பதால் டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வேண்டுமெ என்று மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே இடுவட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற வேண்டும் என்று ஆட்சியர் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், “இடுவட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குடியிருப்பின் நடுவே அரசின் டாஸ்மாக் சாராயக் கடை செயல்பட்டு வருகிறது.
இந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டு விட்டதால் அருகே உள்ள கிராமங்களில் இருந்து குடிகாரர்கள் கூட்டம் கூட்டமாக இந்த டாஸ்மாக் சாராயக் கடையை நாடி வருகின்றனர்.
இங்கு சாராயத்தை வாங்கிவிட்டு, பேருந்து நிலையம் சாலையில் அமர்ந்து குடிக்கின்றனர். அதன் காரணமாக தோட்ட வேலைக்குச் சென்று வரும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மக்கள் பெரும் இடையூற்றை அனுபவிக்கின்றனர்.
மேலும், குடிகாரர்கள் போதையில் தகாத வார்த்தைகளை பேசுவதால் அந்த வழியாக செல்பவர்களுக்கும் அசௌகரியமாக இருக்கிறது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.