மனித உயிருக்கு என்ன மதிப்பு? ரூ.50 ஆயிரத்துக்கு லெட்டர்பேட், பெயரை வாடகைக்கு விடும் டாக்டர்கள்...

Asianet News Tamil  
Published : May 23, 2017, 02:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
மனித உயிருக்கு என்ன மதிப்பு? ரூ.50 ஆயிரத்துக்கு லெட்டர்பேட், பெயரை வாடகைக்கு விடும் டாக்டர்கள்...

சுருக்கம்

Doctors rental his Letterhead for Rs. 50 thousand

தமிழகத்தில் 12-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்களின் பெயரையும், லெட்டர்பேடையும் மாதத்துக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டு சம்பாதிப்பதை மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை சேவை இயக்குநரகம் கண்டுபிடித்துள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பதிவு பெற்ற டாக்டர் வீரணன் கண்ணன்(பதிவு எண்58873) தனது பெயரையும், லெட்டர்பேடையும் வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளார். தேவாரம் பகுதியைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் வினோத் ஜாய் என்பவருக்கு டாக்டர் வீரணன் கண்ணன் வாடகைக்கு விட்டுள்ளார்.

இதை கண்டுபிடித்த மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இணை இயக்குநர் எஸ். அமுதினி தேனி மாவட்ட  போலீஸ் எஸ்.பி.யிடம் வினோத் ஜாய், டாக்டர் வீரணன் கண்ணன் ஆகியோர் மீது நேற்று முன் தினம் புகார் அளித்தார். அதில், டாக்டர் கண்ணன் பெயரில், ஜாய் என்பவர் மருத்துவமனையும், மருந்தகமும் தேவாரத்தில் நடத்துகிறார் என்று தெரிவித்து இருந்தார்.

இது குறித்து ஊரகநலத்துறை இணை இயக்குநர் டாக்டர் குருநாதன் கூறுகையில், “ டாக்டர் கண்ணன் லெட்டர் பேடில், வினோத் ஜாய் என்பவர் மருந்துகளையும், மாத்திரைகளையும் எழுதி நோயாளிகளிடம் கொடுப்பதை நேரடியாகப் பார்த்து கையும் களவுமாக பிடித்தோம். ஆனால், அவரை போலீசார் உதவியுடன் கைது செய்ய முயன்றபோது, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மருந்துகளையும் பறிமுதல் செய்யமுடியாதபடி தடுத்தனர்.

நாங்கள் வினோத் ஜாயிடம் நடத்திய விசாரணையில், டாக்டர் கண்ணனின் லெட்டர் பேட், பெயரை பயன்படுத்திக்கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் அவருக்கு கொடுத்து வருகிறேன் என்று தெரிவித்தார். அதேபோல, டாக்டர் கண்ணனும் வாரம் ஒருமுறை இந்த கிளினிக்குக்கு வந்து சென்றுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.

கடந்த 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, பயிற்சி இல்லாமல் யாரும் ஆங்கில மருந்துகளையும், மாத்திரைகளையும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி முடித்தவர்கள் கூட இந்த மருந்துகளை பரிந்துரைக்க கூடாது. இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன்படி, பதிவு செய்யப்பட்ட மருத்துவர் மட்டுமே இந்த மருந்துகளை அளிக்க வேண்டும்.

இதற்கிடையே கடந்த வாரம் சென்னையில் இதேபோல, மகப்பேறு மருத்துவர் ஒருவர் லெட்டர் பேடில் ஒரு அலோபதி டாக்டர் ஒருவர் மருந்துகளையும், மாத்திரைகளையும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்துள்ளதை மருத்துவத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் இதேபோன்று ஹோமியோபதி, சித்தா, யுனானி மருத்துவர்கள், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்து வருகிறார்கள் என்று இந்திய மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த இதுபோன்று 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்,  அவர்கள் செய்யும் செயல் கொலை முயற்சிக்கு சமம் என்கிற போதிலும், கடும் எச்சரிக்கை செய்தும், அபராதத்துடனும் விடுவிக்கப்பட்டனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே. செந்திலிடம் கேட்டபோது, “ தவறு செய்யும் இதுபோன்ற டாக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து குறைந்தபட்சம் 9 மாதங்கள் பயிற்சி செய்ய தடை விதிக்கப்பட வேண்டும். ஆனால், தனிப்பட்ட முறையில் எந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஏனென்றால் 7 பேர் கொண்ட நிர்வாகக் குழுவே இந்த முடிவை எடுக்கும்’’ என்றார்.

PREV
click me!

Recommended Stories

2004 தேர்தல் சமயத்தில் நடந்த சம்பவம்! குறுக்கு வழிகளை விட உழைப்பே உண்மையான உயர்வை தரும்! பூங்குன்றன்
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.. அடித்து சொன்ன ஓபிஎஸ்.. உதயசூரியனில் ஐக்கியமாகும் தேதி இதுவா?