ஐ.பி.எல். போட்டிகளை சென்னையில் நடத்தாமல் வேறு மாநிலத்தில் நடத்திக் கொள்ளுங்கள் - திருமாவளவன் கோரிக்கை...

First Published Apr 10, 2018, 8:17 AM IST
Highlights
Do not held ipl matches in Chennai held in another state - Thirumavalavan request ...


கடலூர்

சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராடுகிற தமிழக மக்களின் உணர்வுகளை, போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கையாக அமைந்துவிடும். எனவே, ஐ.பி.எல். போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது, அங்கு சேத்தியாத்தோப்பு அருகே பரதூர்சாவடி கிராமத்தில் பாலியல் பலாத்கார முயற்சியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

அதனைத் தொடர்ந்து அந்த சிறுமியின் பெற்றோருடன் ஆட்சியர் தண்டபானியை சந்தித்து மனு அளித்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம், "கடலூர் மாவட்டம், பரதூர்சாவடி கிராமத்தை சேர்ந்த சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 

இதனைக் கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், மக்கள் போராட்டம் நடத்தினர். 

இந்த கொலை தொடர்பாக ஆதிதிராவிடர் அல்லாத மூன்று பேர் குற்றச்செயலில் ஈடுபட்டதாக தகவல் வந்தது. ஆனால், ஆதிதிராவிடரை சேர்ந்த இளைஞர்தான் கொலை செய்தார் என்று அவரை மட்டுமே காவலாளர்கள் கைது செய்துள்ளனர்.

இந்த செயல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்டவர்கள் அளித்த புகார் மனுவையும் காவலாளர்கள் பெறவில்லை. மேலும் அவர், கொலையை எப்படி செய்தார் என்று நடித்து காட்டியதுபோல் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் காவலாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது சட்ட விதிமீறலாகும். ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். ஆகவே, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

ஆட்சியர் இதுபற்றி புலன் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் , அதில் அவர்கள் கூறப்பட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களுக்கு பாலியல் வன்முறையில் தொடர்பு இருக்கிறதா? என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணி கட்சியினர் நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றது. கடந்த 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து ஒரு குழு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மற்றொரு குழு அரியலூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கி உள்ளது. இந்த நடைபயணத்தில் நாளை (அதாவது இன்று) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் (திருமாவளவன் ) உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறோம்.

கடலூரில் வருகிற 12-ஆம் தேதி பொதுக்கூட்டம் நடக்கிறது. மறுநாள் 13-ஆம் தேதி கடலூரில் இருந்து ஊர்தி பயணமாக சென்னை சென்று, அங்கு ஆளுநரைச் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக மனு அளிக்கிறோம். 

சென்னைக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு சின்னம் அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

காவிரி பிரச்சனை இருக்கும் இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்தது, போராடிக் கொண்டிருக்கும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இது உள்நோக்கத்தின் செயல்பாடாகும். இதை ஆளுநர் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்துவது, இன்றைக்கு காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராடுகிற, ஒட்டு மொத்த தமிழக மக்களின் உணர்வுகளை, போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கையாக அமைந்துவிடும். இது பற்றி போட்டி நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் அல்லாது வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தி.மு.க., காங்கிரசு, விடுதலை சிறுத்தைகள் உள்பட ஒன்பது கட்சியினர் சேர்ந்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.

தமிழகத்தில் நடந்து வரும் காவிரி தொடர்பான போராட்டத்தை தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் கேலி செய்வது கண்டனத்துக்குரியது. காவிரி பிரச்சனை தொடர்பாக நடிகர்கள் நடத்திய மௌன போராட்டத்தை வரவேற்கிறோம்" என்று அவர் கூறினார்.

இந்தப் பேட்டியின்போது மண்டல செயலாளர் திருமாறன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைசெல்வன், மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், நகர செயலாளர் செந்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன், மாநில ஊடக மைய துணை செயலாளர் கார்க்கி வளவன் உள்பட பலர் உடனிருந்தனர்.

click me!