பக்தர்களிடம் பணம் பறிப்பு செயல்களில் ஈடுபட கூடாது - கோயில் அர்ச்சகர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை...

First Published Jun 6, 2018, 6:30 AM IST
Highlights
Do not flush money from worshipers - court ordered to priests


மதுரை
 
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் அர்ச்சகர்கள் ஈடுபடக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட, ராஜபாளையத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கல்யாணசுந்தரம், மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.250, ரூ.150, ரூ.100 என சிறப்பு கட்டண தரிசன முறை அமலில் உள்ளது. இந்த கட்டண டிக்கெட் வாங்கும் பக்தர்கள் சாமியை அருகில் நின்று தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்படும். 

கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத பலர் கோயில் முன்பகுதியில் இருந்துகொண்டு, பக்தர்களை சாமி அருகில் நின்று தரிசிக்க வைப்பதாக கூறி டிக்கெட் வாங்காமல் கோயிலுக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

அதேநேரத்தில் அவர்களிடம் டிக்கெட்டுக்கு உரிய கட்டணத்தை வசூலித்துக் கொள்கின்றனர். இப்பணத்தை கோயில் நிர்வாகத்திடம் செலுத்துவதில்லை. இவ்வாறு திருச்செந்தூர் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. 

எனவே, திருச்செந்தூர் கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்த தனி குழு அமைக்கவும், கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள், பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதித்தும், கோயில் பணியாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கவும், கோயிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் கருவியை பொருத்தவும் உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை, நீதிபதிகள் எம்.வி.முரளிதரன், டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் விசாரித்து நேற்று உத்தரவு பிறப்பித்தனர். 

அதில், "திருச்செந்தூர் கோயிலில் சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அர்ச்சகர்களால் மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும். 

பக்தர்களை ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி ஒரே விதமாக நடத்த வேண்டும். 

கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் வருகைக்காக பயோமெட்ரிக் பதிவு கருவியை பொருத்த வேண்டும்.

பக்தர்களிடம் சிறப்பு பூஜைகள் என்ற பெயரில் பணம் பறிக்கும் செயலில் அர்ச்சகர்கள் ஈடுபடக் கூடாது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். 

சட்டபூர்வமாக நியமிக்கப்படாத அர்ச்சகர்கள் குறித்த விழிப்புணர்வு பலகைகள் கோயிலில் வைக்கப்பட வேண்டும். 

பக்தர்களின் வசதிக்காக கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். இவற்றை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும்.

இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அதிகாரி ஆகியோர் வருகிற ஜூலை மாதம் 5–ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என்று அவர்கள் அதிரடியாக உத்தரவிட்டனர். 

click me!