
ஈரோடு
இரயில் பெட்டிகளில் முன்பதிவு "சார்ட்" ஒட்டும் நடைமுறையை ரத்து செய்ய கூடாது என்றும் இரயில்வே நிர்வாகம் புதிது புதிதாக அறிவிப்புகளை வெளிட்டு பயணிகளை குழப்ப வேண்டாம் என்றும் இரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா, தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில், "மார்ச் 1-ஆம் தேதி முதல் இரயில் பெட்டிகளில் முன்பதிவு "சார்ட்" ஒட்டப்படாது என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இரயில் பயணிகள் தங்கள் பயணத்தை (120 நாள்கள்) நான்கு மாதங்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம் என்கிற நிலை உள்ளது. முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு தங்கள் இருக்கை வசதி உறுதி செய்யப்பட்டிருக்கும்.
பிறகு முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கை வசதி, காத்திருப்போர் வரிசை எண்ணும் அளிக்கப்படுகிறது. இது பயணத்தின்போது இருக்கை வசதி உறுதி செய்யப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை இரயில் பெட்டிகளில் ஒட்டப்படும் பட்டியலைப் பார்த்து அறிந்துகொள்ள முடியும்.
இந்த நிலையில், மார்ச் 1-ஆம் தேதி முதல் சார்ட் ஒட்டும் நடைமுறையை ரத்து செய்துவிட்டு செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் விவரம் அனுப்பப்படும் என இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது கண்டனத்துக்கு உரியது.
இரயில் பயணம் என்பது வசதி படைத்தவர்கள், ஏழை எளிய, நடுத்தர பாமர மக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானது. இவர்களில் எத்தனை பேர் செல்போன் வைத்திருப்பார்கள், குறுஞ்செய்தியைப் பார்க்க முடியும் என்பது நடைமுறையில் பல்வேறு இடர்பாடுகளைத் தரக் கூடியவை.
குறிப்பாக வயதானவர்கள், எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் நிலைமை பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு பெட்டியாக ஏறி டிக்கெட் பரிசோதகர்களிடம் உறுதி செய்ய அலைய வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, அனைத்துத் தரப்பினருக்கும் வசதியாக நடைமுறையில் உள்ள பயணிகள் சார்ட்டை இரயில் பெட்டிகளில் ஒட்ட வேண்டும்.
இரயில் பரிசோதகர்களிடம் கட்டாயம் முன்பதிவு பயணிகள் சார்ட் இருக்க வேண்டும். அதில் ஒரு பிரதி எடுத்துதான் பெட்டிகளிலும், நடைமேடை நுழைவு வாயில்களிலும் ஒட்டப்படுகிறது.
எனவே, இரயில்வே நிர்வாகம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு பயணிகளைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம்.
இந்த முடிவைக் கைவிடவில்லையெனில் இரயில் பயணிகளையும், பொதுமக்களையும் திரட்டி ஈரோடு இரயில் நிலையத்தில் மாவட்ட காங்கிரசு சிறுபான்மைத் துறை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.