
தஞ்சாவூர்
விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு கொண்டுச் செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் துரைமாணிக்கம் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில், “தமிழகம் முழுவதும் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் மற்றும் அரசு சர்க்கரை ஆலைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக தர வேண்டிய ரூ.1630 கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். இந்தத் தொகையை மாநில அரசுப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை சீர்குலைக்கும் நோக்குடன் பாஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை மத்திய அரசு அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது. காவிரி பிரச்சனையில் கர்நாடகத்திற்கு சாதகமாக பா.ஜ.க அரசு செயல்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்த 2–ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், அந்த தண்ணீர் கடைமடை பகுதிக்குச் சென்று சேரவில்லை. இதனால் கடைமடை பகுதி விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் கல்லணையில் இருந்து முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறைப்பாசனத்தை கைவிட்டு 20 நாட்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
விவசாயத்தை மத்திய பட்டியலுக்கு கொண்டுச் செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் மாதம் 1–ஆஅம் தேதி முதல் 5–ஆம் தேதி வரை புதுடெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார்.