
விழுப்புரம்
தமிழகத்தில் வட மாநில குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவியதாக வாட்ஸ்-அப்பில் பரப்பப்படும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவலாளர்கள் விழிப்பணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறிது நாள்களுக்கு முன்னர் வடமாநில குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளது என்றும் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளும்படியும் வாட்ஸ்-அப்பில் பதிவு ஒன்று பரவியது.
இதனால், திருவண்ணாமலை மாவட்டம், போளூர் பகுதியில் குலதெய்வ வழிபாட்டுக்கு காரில் சென்றவர்களை வட மாநில குழந்தை கடத்தும் கும்பல் என்று கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். நால்வர் பலத்த காயமடைந்தனர்.
அதேபோன்று, சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த வடமாநில இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவமும் இரண்டு தினங்களுக்கு முன்பு அரங்கேறியது.
இதுபோன்று அசாம்பாவிதங்கள் வேறு எங்கும் நடக்கக் கூடாது என்பதற்காக, மக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தும் பணியை காவலாளர்கள் பல்வேறு பகுதிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், காவலாளர்கள் ஆட்டோக்களில், ஒலிபெருக்கி கட்டி கிராமங்களுக்குச் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
"தமிழகத்தில் வட மாநில குழந்தை கடத்தும் கும்பல் ஊடுருவியுள்ளதாக வாட்ஸ்-அப்பில் அஞ்சலில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான காவலாளர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் காவலாளர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று, திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) வீமராஜ் வழிகாட்டுதலின் பேரில், பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாராமன் தலைமையில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பிரச்சாரத்தின்போது, கிராமங்களில் இளைஞர்கள் கொண்ட குழுவை அமைத்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட மக்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும், சந்தேகப்படும் நபர்கள் மற்றும் வெளி மாநிலத்தினர் யாராவது தென்பட்டால் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.