கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? கமலாலயத்தில் ஒரு மூலையில் உட்காருங்க.. ஆளுநரை கடுமையாக விமர்சித்த திமுக!

Published : Jan 20, 2026, 06:07 PM IST
MK Stalin, RN Ravi

சுருக்கம்

அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது.

சட்டமன்ற உரையை வாசிக்காமல் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மீது திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''சட்டமன்றத்தில் இருந்து 3-ஆவது ஆண்டாக உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. மோதல் போக்கு காரணமாக பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரைச் சட்டப்பேரவைக்கு அழைக்காத நிகழ்வுகள் நடைபெற்றன. ஆனால், தமிழ்நாடு மரபைக் கடைப்பிடிக்க முயன்றால், அதனை தனது அவதூறு அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி.

ஆளுநர் அறிக்கை பொய்களின் தோரணம்

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியது குறித்து மக்கள் பவன் வெளியிட்டிருக்கும் அறிக்கை பொய்களின் தோரணம். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர்ச்சியான அவருடைய சட்டமன்ற உரைகளைப் பார்த்தாலே அரசியல் செய்யத்தான் வந்திருக்கிறார் என்பது புரியும். 2022-ல் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரவி, 2024-க்கு பிறகு சண்டித்தனம் செய்வதற்குக் காரணம் அரசியல். ஆளுநர் ரவி ஆளுநராக வந்த போது தனது உரையை முழுமையாகப் படித்தவர், அடுத்தடுத்த ஆண்டுகளில் சாக்குப்போக்கு சொல்லிப் பேச மறுத்ததற்கு காரணம் என்ன? என்பதை மக்கள் அறிவார்கள்.

பல்டி அடித்ததற்கான காரணம் என்ன?

தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதுதான் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு. 2022-ல் ஏற்றுக் கொண்ட ஆளுநர் ரவி, பிறகு ஏன் பல்டி அடித்ததற்கான காரணத்தைச் சொல்லுவாரா? பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜகவின் சித்தாதங்களை அப்படியே உரையில் ஆளுநர்கள் வார்த்தெடுப்பார்கள். பாஜக அல்லாத மாநிலங்கள் என்றால் எதிர்ப்பு காட்டுவார்கள்.

இதயம் ஏன் துடிக்கவில்லை?

அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை எனக் கூறி உரையை வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ரவி. பிரதமர் மோடி பங்கேற்ற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா 2019-ஆம் ஆண்டு இதே ஜனவரியில் நடைபெற்ற போது நிகழ்ந்த சம்பவம் ஆளுநர் ரவிக்கு நினைவிருக்கிறதா? பிரதமர் மோடி பங்கேற்ற அந்த விழாவில் வழக்கத்துக்கு மாறாகத் தேசிய கீதம் பாடப்படவில்லை. பிரதமர் மோடி பங்கேற்ற விழாவிலேயே தேசிய கீதம் மறுக்கப்பட்ட போது ஆளுநர் ரவியின் இதயம் ஏன் துடிக்கவில்லை?

ஆளுநர் மாளிகைக்கே இழுக்கு

தமிழகச் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது இறுதியில்தான் தேசிய கீதம் பாடப்படும். ஆனால், தேசிய கீதத்தைப் புறக்கணித்துவிட்டது போல ஒரு பொய்த் தோற்றத்தை ஏற்படுத்த அரசியல்வாதியைப் போல ஆளுநர் ரவி முயல்கிறார். ''சட்டப்பேரவையில் பேச அனுமதிக்கவில்லை; ஆளுநரின் மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டது; சட்டப்பேரவையில் தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது'' என்றெல்லாம் பேசுவது எதிர்க் கட்சிகள் அல்ல; ஆளுநர் ரவி என்பது ஆளுநர் மாளிகைக்கே இழுக்கு.

மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா?

ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாகச் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். ஆளுநர் அவர்களே அரசியல் செய்வதாக இருந்தால் மக்கள் பவனுக்குள் இருந்து செய்யாமல், கமலாலயத்திற்குச் சென்று செய்யுங்கள். ராஜ்பவன் பெயரை மக்கள் பவன் என மாற்றினால் மட்டும் போதுமா? பெரும்பான்மை மக்களின் குரலை எதிரொலிக்க வேண்டாமா?

ஏன் தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள்?

'அரசியலமைப்பு கடமை அலட்சியம் செய்யப்பட்டுள்ளது’ என்கிறது ஆளுநர் மாளிகை. மாநில அரசின் உரையைத்தான் ஆளுநர்கள் படிக்க வேண்டும் என்பதும் அரசியலமைப்பு கடமைதான். அதனை அலட்சியம் செய்துவிட்டு, அரசியலமைப்பு பற்றியெல்லாம் பாடம் எடுக்க ஆளுநருக்கு அருகதை இல்லை. 'தொழில்முனைவோர் வேறு மாநிலத்திற்குச் செல்லும் நிலை’ என விளக்கம் சொல்லியிருக்கிறது ஆளுநர் மாளிகை. அது உண்மை என்றால், தொழில் வாய்ப்புகளுக்காக வட இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஏன் தொழிலாளர்கள் படையெடுக்கிறார்கள். தொழில் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் இருப்பதால்தானே!

கொஞ்சமும் வெட்கப்பட மாட்டீர்களா?

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், தலித்துகள் மீதான தாக்குதல், போதைப் பொருட்கள் பற்றியெல்லாம் ராஜ்பவன் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சமும் வெட்கப்பட மாட்டீர்களா ஆளுநர் அவர்களே.. தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுடன் போட்டி போடுவதற்கு எதற்கு ஆளுநர் பதவி? கமலாலயத்தின் ஒரு மூளையிலேயே ஆளுநர் மாளிகையை நடத்திக் கொள்ளலாமே! கிண்டியில் உள்ள ராஜ்பவனின் 156 ஏக்கர் பரப்பளவு இடமாவது மிச்சமாகுமே!

பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் பெஸ்ட்

AVTAR குழுமத்தின் அறிக்கை கொஞ்சம் எடுத்துப் படித்துப் பாருங்கள் ஆளுநர் அவர்களே. பெண்களுக்கான டாப் நகரங்கள் 2025 என்கிற AVTAR குழுமத்தின் அறிக்கையில் பெண்களுக்கான பாதுகாப்பை உள்ளடக்கிய சமூக உள்ளடக்க மதிப்பீட்டில் (SOCIAL INCLUSION SCORE) தொடர்ந்து 4வது ஆண்டாக சென்னை முதலிடத்தில் உள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உள்ளடக்கிய சமூக உள்ளடக்க மதிப்பீட்டின் அடிப்படையிலான 125 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பான டாப் 10 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?

ஆளுநர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு வெளியிடுகிறது என்றால், ஒன்றியத்தில் இருந்து ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா? ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார் என்பது அவருடைய நடவடிக்கைகள் அப்பட்டமாக வெளிக் காட்டுகின்றன. ஆளுநருக்கு அரசியல் ஆசை இருந்தால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து தேர்தலில் வென்று அரசியல் செய்யட்டும். ஆளுநர் பதவியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

ஆளுநர் வேடம் தரிக்க வேண்டாம்

2026 சட்டமன்றத் தேர்தலில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவைக்குள் வாருங்கள். ஆளுநர் வேடம் தரித்துக் கொண்டு வராதீர்கள். அது புனிதமான பதவி. அதற்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கல்வித்தரத்தின் உயர்வையும் ஒன்றிய அரசே பல்வேறு புள்ளிவிவரங்கள் மூலம் விளக்கி இருக்கிறது. ஆனால், ஆளுநரோ இன்னும் பீகாரிலோ, உத்தரப்பிரதேசத்திலோதான் இருக்கிறார்.

கண்ணியத்தை கடைபிடிப்பதில்லை

தமிழ்நாட்டில் இருக்கிறோம் என்பதையே மறந்துவிட்டு, தொடர்ந்து தமிழ்நாடு மீதும் தமிழ்நாட்டு மக்கள் மீதும் வன்மத்தைக் கக்குகிறார். அரசியலமைப்பின் மரபையும் சட்டப்பேரவை மாண்பையும் தமிழ்நாடு மதிப்பதனால்தான் ஆளுநர் உரை வாசிக்க அவர் அழைக்கப்படுகிறார். தமிழ்நாடு கடைப்பிடிக்கும் கண்ணியத்தை ஆளுநர் கடைப்பிடிப்பதே இல்லை.

சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவி

வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ வரிசையில் ஆளுநர் பதவியையும் பயன்படுத்தி பாஜக அல்லாத மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த செயல்திட்டத்தில் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட ஆர்.என்.ரவி அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாகச் சட்டப்பேரவை மாண்பை அவமதித்து வருகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பாஜக கொடுத்த செயல்திட்டமே ஆர்.என்.ரவியின் இன்றைய செயல்பாடுகள்.

பதவிக்குரிய மரியாதையை திமுக அரசு கொடுக்கிறது

ஆட்டுக்குத் தாடி போல் நாட்டுக்கு ஆளுநர் பதவி தேவையற்றது என்பது திமுகவின் கொள்கை முழக்கம் என்றாலும் அரசியலமைப்பைச் சட்டத்தை மதித்து ஆளுநர் பதவிக்குரிய மரியாதையை திமுக ஆட்சி தந்துகொண்டிருக்கிறது. ஆனால், காலாவதியான பதவியில் அமர்ந்து கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் அசிங்கப்படுவதற்கே அவதாரம் எடுத்தவர் நான் என்பது போல இறுமாப்புடன் நடந்து கொள்கிறார் ஆளுநர் ரவி.

கமலாலயத்தின் ஒரு மூலையில் அமரலாம்

ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ் பிரசாரகராகவும், பாஜக தலைவராகவும் முன்னிலைப்படுத்துவதையே விரும்புகிறார் என்றால் கமலாலயத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கொள்ளலாம். அபத்தங்களும், அவதூறுகளும், அரைகுறைத்தனமும் கொண்ட ஆளுநர் ரவியின் அறிக்கை அவருக்குத் தமிழ்நாட்டின் மீது இருக்கும் வெறுப்பு முற்றிப் போய்விட்டிருப்பதையே காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தால் பல்வேறு நேரங்களில் அரசியலமைப்புக்கு விரோதமாகச் செயல்படுகிறார் எனக் குட்டு வாங்கிய பெருமைக்குரியவர் இந்தியாவிலேயே ஆளுநர் ரவி மட்டும்தான்.

ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும்

இந்தியா முழுவதும் பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்றத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் ஆளுநர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் ஆளுநர் உரை எனும் நடைமுறையை நீக்க தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சூளுரைத்துள்ளார்; இனி இந்தக் குரல் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒலிக்கும், ஆளுநர்களின் அத்துமீறலை ஒழிக்கும்'' என்று கூறியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பனி விலகி மழை வருமா? வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்!
மோடி மேடையில் பிரேமலதா.. இறுதிக்கட்ட பேரத்தை முடித்த அதிமுக..! இத்தனை சீட்டுகளா..?