நாளை மாலை புதிய எம்.பி.க்கள் கூட்டம்: திமுக அறிவிப்பு!

By Manikanda Prabu  |  First Published Jun 7, 2024, 5:14 PM IST

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.க்களின் கூட்டம் நாளை மாலை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது


நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளுக்கும் முதற்கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 1ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி  293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, தமிழ்நாட்டின் 39, புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. நாற்பதும் நமதே என்ற திமுக தலைவர் ஸ்டாலினின் முழக்கத்தை உடன்பிறப்புகள் மெய்பித்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக,  தமிழக மக்கள், திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஜூன் 4ஆம் தேதி இரவே முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பி-க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் மக்களவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் அதிகரித்த வாக்கு சதவீதம்: நரேந்திர மோடி பெருமிதம்!

முன்னதாக, தமிழ்நாடு அரசின் துறைகள் ரீதியான மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை வருகிற ஜூன் 24ஆம் தேதி கூடுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். வழக்கமாக பட்ஜெட்டையொட்டி, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் விவாதம் நடத்தப்படும். ஆனால், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மானிய கோரிக்கை விவாதம் நடத்தப்படாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த 2024-25ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 19ஆம் தேதியும், வேளாண் பட்ஜெட் பிப்ரவரி 20ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்ரவரி 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான விசாதம் நடைபெறவிருந்த நிலையிக், தேர்தல் காரணமாக சட்டப்பேரவை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மக்களவை தேர்தல் முடிந்து, நடத்தை விதிகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதால், மானிய கோரிக்கை விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!