தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்காத நிதியமைச்சர்! மத்திய பட்ஜெட்டா? பீகார் பட்ஜெட்டா? தயாநிதி மாறன்!

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு பெரிய திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரி உச்சவரம்பு உயர்வு மிடில் கிளாஸ் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழகத்திற்கு அளிக்கப்படவில்லை.

DMK MP Dayanidhi Maran criticize Union Budget 2025 tvk

நாடே எதிர்பார்த்த மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தமிழகத்தில் பல்வேறு சலுகைகள், மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ மட்டுமின்றி மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள், ஃபெஞ்சல் புயல், ரயில்வே திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அதாவது மத்திய பட்ஜெட்டில் அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும். விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். உணவு விநியோகம் உள்ளிட்ட டெலிவரி ஊழியர்களுக்கு காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அவர்களுக்கு என்று தனித இணையதளம் தொடங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

Latest Videos

இதையும் படிங்க: பட்ஜெட் 2025 : 12 லட்சம் வரை வரி இல்லை; விவசாயிகள், MSMEகளுக்கு முக்கிய அறிவிப்புகள்!

குறிப்பாக தனி நபருக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறுபவர் வருமான வரி கட்ட அவசியமில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு மிடில் கிளாஸ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு என்ற வார்த்தையை மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை.

ஆனால் பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் அம்மாநிலத்துக்கு மட்டுமே ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாது பீகாரில் தேசிய உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும். இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். பீகாரில் மக்கானா (தாமரை விதை) உற்பத்திக் கூடம் அமைக்கப்படும். ஐஐடி பாட்னாவில் உள்கட்டமைப்பு மற்றும் விடுதி வசதிகளை விரிவுபடுத்துவதாகவும், மாநிலத்தின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பீகாரில் பசுமை வழி விமான நிலையங்கள் அமைக்கப்படும் மற்றும் பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் பல மாநிலங்கள் பெயர்கள் இடம் பெறாத நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 

இதையும் படிங்க:  ஒட்டுமொத்தமா கல்விக்கு ரூ.500 கோடி; AI-யில் கவனம் செலுத்தும் மோடி அரசு!

இந்நிலையில் பட்ஜெட் குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திமுக எம்.பி. தயாநிதி மாறன்: இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். டெல்லிக்கு குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 8 முதல் 12 லட்ச வருமானத்துக்கு 10% வரி உள்ளது தெரிவித்துவிட்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறுவது மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தான். பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது. தமிழகம் அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை என்று தெரிவித்தார்.

click me!