
திருப்பூரில், ஜன்னல் வைக்கக் கூடாது என்று பக்கத்து வீட்டுக்காரரை, திமுக மாணவரணி நிர்வாகி தாக்கியதால் அவர்மீது காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.
திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அருகேயுள்ள மூகாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (64). இவர் சாமுண்டிபுரத்தில் முட்டை மற்றும் எண்ணெய் விற்பனைக் கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் ராம்குமார் (36). இவர் திமுகவில் மாணவரணி பிரிவில் நிர்வாகியாக இருக்கிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் அவருடைய வீட்டு மாடியில் புதிதாக ஜன்னல் வைப்பதற்காக வேலை பார்த்துள்ளார். இதற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராம்குமார் ஜன்னல் வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால் பாலகிருஷ்ணன் வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவலாலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், ராம்குமார், பாலகிருஷ்ணனின் முட்டைக் கடைக்குள் நேற்று முன்தினம் தடலாடியாக புகுந்து அவரைத் தாக்கியுள்ளார். இதில், பாலகிருஷ்ணனுக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர், இதுதொடர்பாகவும் ராம்குமார் மீது பாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனால், ராம்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஆனால், ராம்குமாரும், பாலகிருஷ்ணன் மீது புகார் அளித்ததால், பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மீதும் வழக்குப் பதிவு செய்தனர் காவலாளர்கள்.
இதுகுறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.