திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகியாகக்கூட இருக்கலாம்: கனிமொழி சூசகம்!

By Manikanda Prabu  |  First Published Jan 23, 2024, 2:53 PM IST

திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்


நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை திமுக தொடங்கியுள்ளது. ஏற்கனவே வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தை மண்டல வாரியாக நடத்தி முடித்துள்ள திமுக சார்பில், மக்களவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டணி பேச்சு நடத்தும் குழு, கணிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் 5 பேர் கொண்ட குழு என மொத்தம் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்பதை, தேர்தல் குழு அமைப்பின் மூலம் திமுக காட்டியுள்ளது. ‘தொடங்கியது 2024 தேர்தல் பணி; பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்! இந்தியா வெல்லும்’ என முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

திமுக அமைத்துள்ள குழுக்களில் இளையோர் மற்றும் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கணிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எம்.அப்துல்லா எம்.பி. மருத்துவர் எழிலன் நாகநாதன், மேயர் பிரியா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கணிமொழி தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூடி விவாதித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க விருக்கிறோம். தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், கல்வியாளர்கள் என பல்துறையை சேர்ந்தவர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறியவுள்ளோம். அதன்பிறகு, மீண்டும் இங்கு கூடி தேர்தல் அறிக்கை முடிவு செய்யும் பணிகள் தொடங்கப்படும்.” என்றார்.

ராமர் கோயில் திறப்பு: பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்த மக்கள் கூட்டம்!

“இன்றைய கூட்டத்தில் பொதுமக்கள், பல்துறையை சார்ந்தவர்களை சந்திக்கும் பொருட்டு எந்தெந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியல் முதல்வரிடம் காட்டி ஒப்புதல் பெறப்பட்டு அந்த ஊர்களுக்கு செல்லவுள்ளோம். மக்களிடம் கோரிக்கையை பெற்று அதனடிப்படையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். எந்த விஷயங்களை கருத்தில் கொண்டு தயார் செய்யப்போகிறோம் என்பது அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.” எனவும் கனிமொழி கூறினார்.

மேலும், திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் எனவும் கனிமொழி கூறினார். பொதுவாக, தேர்தல் அறிக்கைகள் கட்சிகளுக்கு பொதுத்தேர்தலில் மிகவும் முக்கியமானவை. தேர்தல் அறிக்கையை ஒரு கட்சியின் கதாநாயகன் என்று கூறுவர். அந்த அளவுக்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. இந்த முறை திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு பெண்ணான கனிமொழி தலைமை தாங்குகிறார். இதனையும், தேர்தல் அறிக்கையில் பெண்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டும் வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை, இந்த முறை கதாநாயகியாகக்கூட இருக்கலாம் என கனிமொழி கூறியதாக கூறுகிறார்கள்.

click me!