
பெரம்பலூர்
பெரம்பலூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் வராததால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது.
நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று மனுவை வாபஸ் பெறும் கடைசி நாளாகும். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை.
இதனைக் கண்டித்து ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், தி.மு.க.வினர் கொளக்காநத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்கள், தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அதன்படி, தேர்தலை ஒத்தி வைப்பதாக கூட்டுறவு சங்க சங்க அலுவலர் அறிவித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதேபோல ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. நேற்று வேட்பு மனு வாபஸ் நடைபெற வேண்டும். ஆனால், அதிகாரிகள் யாரும் வராததால் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சிறுவாச்சூர் நெடுஞ்சாலையில் சாத்தனூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், காவலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்து அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்.