
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் அரசியல் கட்சி தலைவர்களான ஜெயலலிதா, ஸ்டாலின் போன்றோரின் பிறந்தநாள் வருவதால் சுவர் விளம்பரம் செய்வதில் இரு தரப்பு அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.
ஏதேனும் நிகழ்ச்சி, கட்சிச் சார்ந்த விழாக்கள், அரசியல் பிரமுகர்களின் பிறந்தநாள், இறந்தநாள் என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதில் தீவிரமாக இருக்கின்றனர். விட்டால் தும்பினால் கூட பேனர் வைத்தாலும் ஆச்சரியம் இல்லை.
தற்போது, டிஜிட்டல் பேனர்களை வைப்பதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், விதிமுறைகள்படி டிஜிட்டல் பேனர்கள் வைத்தாலும் மூன்று நாள்களுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்வதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.
டிஜிட்டல் பேனர்களை விட சற்று செலவு அதிகம் ஏற்பட்டாலும் நீண்ட நாள்களுக்கு சுவர் விளம்பரங்கள் தாக்குப்பிடிக்கும் என்பதால், மக்கள் மனதில் இடம் பிடிக்கும் என்று எண்ணி அரசியல் பிரமுகர்களின் இந்த செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் தற்போது சுவர் விளம்பரங்கள் செய்வதில் அதிமுக, திமுகவினரிடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது.
பிப்ரவரி 24-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால் அதிமுகவினர் நகர் மற்றும் புறவழிச் சாலை பகுதிகள், கிராமப் பகுதிகளில் உள்ள சுவர்களில் முன்கூட்டியே இடம்பிடித்து விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டனர்.
இதேபோல், மார்ச் 1-ஆம் தேதி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மற்றும் மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோட்டில் நடைபெறவுள்ள கட்சி மாநாட்டுக்கு திமுகவினர் சுவர் விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.
இதனிடையே டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களும் தங்கள் பங்கிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளுக்கு சுவர் விளம்பரம் செய்வதில் முனைப்பு காட்டிவருகின்றனர்.
இப்படி நாலா பக்கமும் பெரிய அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரத்துக்காக போட்டி போட்டு வேலை செய்யும் வேளையில் மக்கள் நலனுக்காக வேலை செய்தால் சுவர் விளம்பரம் இல்லாமலே மக்கள் நினைவில் இடம் பெற்றிருக்கலாம்.
"சுவர் விளம்பரத்தால் எந்தவொரு மாற்றத்தையும் மக்கள் மனதில் ஏற்படுத்திவிட முடியாது". அப்படியே ஏற்படுத்த அது என்ன நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற பிரபல நடிகைளின் படமா?
அதுமட்டுமின்றி ஜெயலலிதா, கருணாநிதி படத்தை டிஜிட்டலில் வைத்தால் வரும் ஈர்ப்பை விட வரைந்து சுவற்றில் பார்க்கும்போது அவ்வளவாக ஈர்ப்பு இருக்காது. சில சுவர்களின் அந்த வரையப்பட்டுள்ள படம் ஜெயலலிதாவா? என்றே உற்று பார்த்த நாள்களும் உண்டு.
எவ்வளவு சுவர் விளம்பரம் செய்தாலும் இரவு நேரங்களில் அனைத்து சுவர்களும் சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுகிறது. சுவர் விளம்பரம் செய்த செலவில் கழிப்பறைகளை கட்டி நன்றாக பராமரித்து இருக்கலாம்.