
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுடன் இடையே தகராறு ஏற்பட்டதால் உழவர் சந்தை வேளாண் அலுவலர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வடக்குமாதவி சாலையில் உள்ள உழவர் சந்தையில் 130-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டும், முப்பதுக்கும் குறைவான விவசாயிகளே பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண்துறை ஒத்துழைப்புடன் வியாபாரிகளே உழவர் சந்தையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் புகார் அளித்தும் வேளாண் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை உழவர் சந்தை விவசாயிகளிடம் சென்ற, தினசரி சந்தை வியாபாரிகள் சிலர் காலை 10-க்குள் விற்பனையை முடித்துவிட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து உழவர் சந்தை உதவி வேளாண் அலுவலர்களிடம் வியாபாரிகள் முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, இருதரப்பினரையும் வேளாண் அலுவலர்கள் சமரசப்படுத்தி அனுப்பினர்.
இதுகுறித்து உழவர் சந்தை வியாபாரிகள், "உழவர் சந்தையில் அதிகளவில் வியாபாரிகள் உள்ளதால் விவசாயிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் நிலவுகிறது. இங்குள்ள வியாபாரிகள் அனைவரும் தினசரி சந்தையை சேர்ந்தவர்களே. இதனால் நாங்கள் உற்பத்தி செய்துவரும் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
எனவே, உழவர் சந்தையில் உள்ள வியாபாரிகளை வெளியேற்றி விட்டு, விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடைகளை முறையாக ஒதுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கின்றனர்.