
உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித் தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டு புத்தம் புதுப் பொலிவுடன் தயாராக இருப்பது பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்குரிய தலையாய சிறப்புகளில் ஒன்று ஆழித் தேரோட்டம். அலங்கரிக்கப்பட்ட 96 அடி உயரத்திலான ஆழித் தேரில் கண்ணப்பநாயனார், அமர்நீதியார், இயற்பகையார், ஏனாதிநாயனார், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட 63 நாயன்மார்களின் சிற்பங்கள், பெரியபுராணம், சிவனின் திருவிளையாடல்களை விளக்கும் சிவபுராண காட்சிகள் போன்றவை மரத்தில் புடைப்புச் சிற்பங்களாக தேரின் 3 நிலை கொண்ட அடிப்பாகத்தில் அழகியக் கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர் ஆசியாவில் மிகப்பெரிய ஆழித்தேர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற தேரோட்டத்துக்குப் பிறகு புதிய ஆழித் தேர் கட்டப்பட்டு 2015 அக்.26-ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்ற ஆண்டு ஜூன் 15, 16-ஆம் தேதிகளில் 6 ஆண்டுகளுக்குப் பின் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
தற்போது 2017-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆழித் தேரோட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேரில் உள்ள சிறு,சிறு பழுதுகள் சரி செய்யப்பட்டன. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் என்பதால் தேர் சக்கரங்களுக்கு இந்த ஆண்டு டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. தேரை இலகுவாக இயக்குவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தேரோட்டத்துக்குத் தேவையான பனஞ்சப்பைகள், முட்டுக் கட்டைகள், 2000 மூங்கில்கள் போன்றவை வாங்கப்பட்டுள்ளன.
தேருக்குப் பயன்படுத்தப்படும் குதிரைகளை புதுப்பிக்கப்பட்டுள்ளன.தேரில் அமைக்கப்படும் குதிரைகள், ரிஷப வாகனம், யாளம், பாம்பு யாளம், துவாரபாலகர், பெரியகத்தி கேடயம், பூக்குடம், ராஜாராணி, கிழவன் கிழவி உள்ளிட்டப் பொம்மைகள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ள இந்த அழகிய திருவாரூர் ஆழித்தேரோட்டம் நாளை காலை 7 முதல் 7.30 மணிக்குள் நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆழித்தேரை வடம் பிடித்து இழுக்க தற்போது திருவாரூரில் குவியத்தொடங்கியுள்ளனர்.