
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. திண்டுக்கல் மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்ததாக கூறப்பட்ட காலத்தில் தான், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதே திண்டுக்கல்லில் முக்கிய அமைச்சர்கள் இருந்தபோதிலும், திண்டுக்கல் மாநகராட்சி கண்டுகொள்ளப்படாமலே இருந்து வந்தது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 கவுன்சிலர் பதவிகளுக்கு மொத்தம் 275 பேர் போட்டியிடுகின்றனர். திண்டுக்கல்லில் உள்ள ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், கூட்டுறவுத்துறை அமைச்சரின் சொந்த ஊரான திண்டுக்கல்லில், மாநகராட்சியை திமுக கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் அமைச்சர் செயல்பட்டு வருகிறார். திண்டுக்கல் நகராட்சியின் முன்னாள் சேர்மன் மருமகள், 6 ஆவது வார்டில் போட்டியிடும் சரண்யாவுக்கு மேயர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் மேயர் மருதராஜ் மகள் பொன்முத்து 11 -வது வார்டில் போட்டியிட்டு மேயர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளாராம். முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகன் ராஜ்மோகன் துணைமேயர் வேட்பாளராகவும் ரேசில் இருக்கிறார்கள். தற்போது மருதராஜ் மட்டுமே அனைத்து செலவுகளை ஏற்க வேண்டும் என சீனிவாசன் கூறியதால், இருதரப்பாக பிரிந்து வேலை செய்யும் நிலை அதிமுக-வில் ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தமுறை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திண்டுக்கல் பகுதி வாக்காளர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகின்றனர் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி திண்டுக்கல் மாநகராட்சியில் 12 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. அவற்றின் முழுமையான உடனடி லைவ் அப்டேட்ஸ் அறிந்துகொள்ள ஏசியாநெட் தமிழை தொடர்ந்து படியுங்கள்.