செரிமாணக் கோளாறுக்காக மருத்துவமனைக்கு சென்றவர் மரணம்; தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் போராட்டம்…

First Published Jan 5, 2017, 11:18 AM IST
Highlights


கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில், செரிமாணக் கோளாறுக்காக அனுமதிக்கப்பட்டவர் இறந்ததற்கு தவறான சிகிச்சையே காரணம் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

கோவை, காந்திபுரம் சித்தாபுதூரைச் சேர்ந்தவர் காந்தி. இவரது மனைவி நீலவேணி.
இவர்களின் மகன் பிரதீப்குமார் (20), பிளஸ் 2 முடித்து விட்டு கணினிப் பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில், செரிமாணக் கோளாறு காரணமாக பிரதீப்குமாரை அவரது பெற்றோர் கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலை சேர்த்தனர். அங்கு சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, பிரதீப்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பிரதீப்குமார் இறந்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீப்குமாரின் உறவினர்கள், தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்னையில் மருத்துவமனையின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

மேலும், அந்த மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான இராமச்சந்திரனையும் சிலர் தாக்கியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே வேளையில், தவறான சிகிச்சை அளித்து இளைஞர் உயிரிழக்கக் காரணமான மருத்துவர்களை கைது செய்யவும், மருத்துவமனை நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது உறவினர்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் மீண்டும் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உதவி ஆணையர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான இரத்தினபுரி, காட்டூர் காவலாளர்கள் இரு தரப்பினரிடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து இரத்தினபுரி காவலாளர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை உயர் அதிகாரி, "உயிரிழந்த பிரதீப்குமாரின் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் ஆய்வின் அறிக்கைக்குப் பிறகே தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்தாரா என்பது தெரியவரும். அதற்கு முன்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.

அதேவேளையில், இருதரப்பினரும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.

“தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்” எனக் கூறி அவரது உறவினர்கள் புதன்கிழமை இரவு 7 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

tags
click me!