நீதிமன்றத்திற்கே போலி கணக்கு காட்டும் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்…!

First Published Jan 5, 2017, 11:17 AM IST
Highlights


கோவை மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக, மரக்கன்றுகள் நடப்பட்டு விட்டதாக போலி கணக்கு காட்டியுள்ளனர் நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் என்று மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கோவை வழியாகச் செல்லும் 47, 67, 209 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016 வரை 5 ஆயிரத்து 534 மரங்கள் வெட்டப்பட்டன.

ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு ஈடாக 10 மரக் கன்றுகளை நட வேண்டும்” என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்த விதியை அமல்படுத்தி வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக 10 மடங்கு மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிடும்படி, மதிமுக மாநில இளைஞரணிச் செயலர் ஈஸ்வரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து 10 மடங்கு மரக் கன்றுகளை நட்டு, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து முதல் கட்டமாக 10 ஆயிரம் மரக் கன்றுகளை இரண்டு மாதங்களுக்குள் நட்டுவிடுவதாக நெடுஞ்சாலை ஆணையத்தின் கோவை பிரிவு அதிகாரிகள் உறுதியளித்து இருந்தனர்.

இந்த நிலையில், ஆணைய அதிகாரிகள் இதுவரை நட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்த விவரங்களின் நகல், புகார்தாரருக்கும் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களை ஈஸ்வரன் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தி உள்ளார்.

பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீலாம்பூர் பகுதியில் உள்ள 10 ஏக்கர் இடத்தில் 2,500 மரக்கன்றுகள் நடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவை யாவும் நாற்று நடுவதைப் போல ஒன்றரை, இரண்டு அடிகளுக்கு ஒரு மரக் கன்றுகளாக நடப்பட்டுள்ளன.

மேலும் அதில் பல காய்ந்துவிட்டன. இந்த கன்றுகள் வளர்ந்து பெரிதாகும்போது இடவசதி போதுமானதாக இருக்காது. அதேபோல் இவற்றைப் பாதுகாக்க வேலி அமைக்கப்படவில்லை.

அதேபோலவே, எல் அண்ட் டி புறவழிச்சாலையில் பொக்லைன் மூலம் குழி தோண்டி சில மரக்கன்றுகளை நட்டுள்ளனர். அவற்றுக்கும் வேலி, தண்ணீர் வசதி இல்லாததால் அவை வீணாகி வருகின்றன.

சரவணம்பட்டி பகுதியில் மட்டுமே முறையாக வேலி, சொட்டு நீர் பாசனம் அமைத்து 500 மரக்கன்றுகள் நட்டுள்ளனர்.

மொத்தமாகவே இந்த 500 கன்றுகள் மட்டுமே வளர்ந்து பலன் கொடுக்கும் வகையில் உள்ளன.

நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, கண் துடைப்பு நடவடிக்கையாகவே நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இவ்வாறு செயல்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “மூன்று பகுதிகளிலும் சுமார் 6 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. நீலாம்பூர் பகுதியில் புதிய திட்டமான அடர் நடவு முறையில் நட்டிருப்பதால் மரக் கன்றுகள் அடர்த்தியாக இருப்பதைப் போன்று தோன்றுகின்றன. அனைத்து மரக் கன்றுகளுமே முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன” என்று கூறினர்.

tags
click me!