எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கு… அறிவியல் ரீதியாக பார்க்க வேண்டும்… டி.ஐ.ஜி விளக்கம்!!

By Narendran SFirst Published Nov 22, 2021, 8:20 PM IST
Highlights

எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாக பார்க்கவேண்டும் என்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். 

எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாக பார்க்கவேண்டும் என்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நவல்பட்டு ரோட்டில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதை அடுத்து அவர்கள் ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், அவர்களை பைக்கில் விரட்டி சென்றார். அப்போது திருச்சி புதுக்கோட்டை பிரதான சாலையில் முகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகே சென்ற போது ஒரு இரு சக்கர வாகனத்தை காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் அதிலிருந்து திருடர்களை மடக்கி பிடித்து விட்டு சக காவலர்களுக்கு தகவல் கொடுக்க பூமி நாதன் முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த ஆடு திருடும் கும்பல் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து எஸ்.ஐ. பூமிநாதனை சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதை அடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து கீரனூர் காவல் நிலையத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் படுகொலைக்கு பின்பு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி நடைபெற்றதாகவும் தனித்தனியாக துப்புகளை சேகரித்ததன் அடிப்படையில் 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும். அதில் ஒருவர்‌ மணிகண்டன், மற்ற இருவரும் சிறார்கள் என்றும் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த சில தடயங்கள், சிசிடிவி வீடியோ காட்சிகள் உள்ளிட்டவைகளைக் கொண்டு குற்றவாளிகள் பிடிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், எஸ்எஸ்ஐ கொலை வழக்கை அரசியல் ரீதியாக பார்க்காமல், அறிவியல் ரீதியாக பார்க்கவேண்டும் என்றும் பூமிநாதன் பின் புறத்திலிருந்து தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களின் உடற்கூறு ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

குற்றவாளிகளில் ஒருவரான மணிகண்டன் சம்பவத்தின்போது தான் குடி போதையில் இருந்ததாக கூறுகிறார் என்றும் அதை உறுதிபடுத்த முடியவில்லை என்றும் கூறிய திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர்,  காவல்துறையினர் இரவுநேர ரோந்து பணிகளின்போது பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் காவலர்களது பாதுகாப்பிற்காக ஆயுதங்களுடன் ரோந்து செல்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறிய அவர், நீதிமன்றத்தில் சாட்சிகள் சமர்பிப்பதை பொறுத்து அதிகபட்ச தண்டனைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் ஆயுள்தண்டனையும் மரணதண்டனையும் கூட சாட்சிகளை பொறுத்து குற்றவாளிகளுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இரண்டு இளஞ்சிறார்கள் சிறுவர்களுக்கான குற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

click me!