
நடிகர் தனுஷை தங்களது மகன் என்று உரிமை கோரி மேலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தனுஷ் இன்று நேரில் ஆஜரானார்.
மதுரையை அடுத்த மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதி மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் திரைப்பட நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி, வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவில் தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் 65 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் தனுஷ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் தனுஷ் தங்கள் மகன்தான் என்பதை நிரூபிக்க தங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளதாக கதிரேசன் தம்பதியினர் தெரிவித்திருந்தனர்.
ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது கதிரேசன் தம்பதியர் பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். இதை ஆய்வு நீதிமன்றம், பள்ளி மாற்றுச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதைக் கண்டறிந்து அதுதொடர்பாக தனுஷ் தரப்பு வழக்குரைஞர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே பள்ளி மாற்றுச் சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள மச்சம் உள்ளிட்ட அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா என்பதை கண்டறிய நடிகர், தனுஷ் ப்ரவரி 28ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் இன்று நேரில் ஆஜர் ஆனார்.