
திருவண்ணாமலை
நதிகள் தேசிய மயமாக்கும் வரை தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தேர்வை நடத்தக்கூடாது என்று கூறி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு பள்ளி ஆசிரியர் ஒருவர் தலைகீழாக நின்று மனு கொடுத்தார்.
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பழனி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அவரிடம் அளித்தனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, சாதி சான்றிதழ், வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, தனிநபர் கழிவறை கட்ட நிதியுதவி என முகாமில் 690 மனுக்கள் பெறப்பட்டன.
மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை வேட்டவலம் சாலை ராகவேந்திரநகரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கொளஞ்சியப்பன் என்பவரும் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
அவர் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு தலைகீழாக நின்றார். விளையாட்டுக்காக அதனை செய்கிறார் என அங்கிருந்தவர்கள் நினைத்தனர். ஆனால் சிறிது நேரம் தலைகீழாக அவர் நின்றதால் அங்கிருந்த காவலாளர்கள் அவரிடம் விசாரித்தனர்.
‘நீட்’ நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இவ்வாறு தலைகீழாக நின்றதாக கூறினார்.
அவர் கையில் வைத்திருந்த மனுவில்,
‘நீட்’ நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
நதிகள் தேசிய மயமாக்கும் வரை தேசிய அளவிலான மருத்துவ நுழைவு தேர்வை நடத்தக்கூடாது.
மாணவர்களை கல்வி என்னும் பெயரால் பந்தய குதிரையாக்க வேண்டாம்.
கல்வி என்பது மாணவனை மனிதனாக்கி, மனிதரை புனிதராக்க வேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்து விட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் பணிநியமனம் வழங்க வேண்டும்.
இதுவரை நடைபெற்ற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும்” என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
பின்னர் மனுவை ஆட்சியர் அலுவலகத்தில் அவர் கொடுத்தார்.
இந்தக் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜோதி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் குணசேகரன் (பொது) மற்றும் அனைத்து துறைகளையும் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.