கள்ளச்சாராயம் சாப்பிட்டு 12 பேர் உயிரிழந்த நிலையில் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஓழிக்க சிறப்பு தேடுதல் வேட்டை அமைத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் - பலி அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் நேற்றுமுன்தினம் அமரன் என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்துள்ளார்.இதை சாப்பிட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் அடுத்ததடுத்து மயக்கம் அடைந்துள்ளனர். இதனையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 7 பேர் உயிரிழந்தனர். இதே போல தே கள்ளச் சாராயத்தை குடித்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக அரசியில் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். கள்ளச்சாரயம் மரணம் தொடர்பாக விளக்கம் அளித்த வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை
தலைமறைவான 4 பேரை பிடிக்க 10 ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில், கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வனப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மெத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள்