
திருச்சி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
"பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் 2011-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சாதிவாரி மற்றும் சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும். ஆனால், இந்த விவரப்படி பயனாளிகள் பட்டியலைத் தயார் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன.
வீடு கட்டி முடிக்க உரிய அவகாசம் வழங்கி நெருக்கடி கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம். வீரசேகரன் தலைமை வகித்தார்.
இதில், கோரிக்கை விளக்கவுரையை சங்க மாவட்டச் செயலர் பா. மருதுபாண்டியன் வழங்கினார். மாநிலத் துணைத் தலைவர் எம். பழனியப்பன் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.