பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்…

First Published Nov 2, 2017, 9:59 AM IST
Highlights
Demonstrate the Village Health Nurses to emphasize various demands ...


திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் திண்டுக்கல் - பழனிச் சாலையில் உள்ள பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பத்மா தலைமை தாங்கினார். மாநில இணைச் செயலர் மாரியம்மாள் முன்னிலை வகித்தார். இதில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.

இதில், மாநிலத் தலைவர் பா.நிர்மலா பேசியது:

“பள்ளி சுகாதார தடுப்பூசி பணிக்கு கிராம சுகாதார செவிலியர்களை கட்டாயப்படுத்துவதைக் கைவிட வேண்டும்.

செவிலியர்களை ஒருமையில் பேசும் தாடிக்கொம்பு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணக்கெடுப்பு, தடுப்பூசி, பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணி நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பிக்மியை செயல்படுத்துவது இயலாது.

இது தொடர்பாக சுகாதார திட்ட இயக்குநர் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், புதிய பிக்மியில் தேவையில்லாத கூடுதல் தகவல்கள் சேகரிப்பதை தவிர்ப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய பிக்மியில் மாற்றம் வரும் வரை இதற்காக போராடும் சுகாதார செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

click me!